டெல்லி முதல்வராக 3-வது முறையாக ஆம் ஆம்தி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக்கொண்டார். கெஜ்ரிவாலுடன் 6 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணம் செய்து வைத்தார். 

இந்தியாவின் இதயமாக கருதப்படும் டெல்லிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், 62 தொகுதிகளில் வென்று, ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக எட்டு தொகுதிகளில் வெற்றி. காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் பல்வேறு இடங்களில் டெபாசிட் பறிபோனது. அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வராக பதவியேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தார். கெஜ்ரிவாலின் பரிந்துரையை ஏற்று 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவும் அவர் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் கெஜ்ரிவால் 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன், மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்த விழாவில் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் முதல் மருத்துவர்கள் வரை என்று டெல்லியின் கட்டமைப்புக்கு உதவி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த தனிநபர்கள் 50 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் விழா மேடையில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்;- டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை. டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். டெல்லியில் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன். மாற்றந்தாய் மனப்பான்மையுடன் செயல்படாமல் 5 ஆண்டும் அனைவருக்காவும் பாடுபடுவேன் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி மாணவர்களின் கல்விக் கட்டணம் வசூலிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.