அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக ஏஐசிடி இலிருந்து எந்த கடிதமும் வரவில்லை என மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ம் தேதி முதல்  பல கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இதனால், பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர அனைத்து பருவ தேர்வில் இருந்தும் விலக்கு அளிப்பதாகவும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி பெற்றதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதன் மூலம் அரியர் வைத்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக நினைத்துக்கொண்டு முதல்வருக்கு பேனர் வைத்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய அண்ணா பல்கலை வேந்தர் ஏஐசிடியின் பரிந்துரையை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அமைச்சர் அன்பழகன் இதுதொடர்பாக மாற்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அரசு பின்வாங்காது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை வேப்பேரியில் கலை, அறிவியல் கல்லூரி ஒன்றின் புதிய கட்டிடத்தை அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி ஷர்டுகள் மூலம் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவது ஜனநாயகப் பண்பு என்றும் ஜெயக்குமார் கூறினார். 

மேலும், அரியர் மாணவர்கள் தேர்ச்சி ரத்தாகும் வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த அவர் அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்ததற்கு எதிராக  ஏஐசிடி இலிருந்து எந்தவிதமான கடிதமும் வரவில்லை. அரியர் மாணவர்களின் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.