பெரிய விவரிப்புகள் எதுவும் தேவையே இல்லை....’ஏழு பேர் வழக்கு’ என்று சொன்னாலே போதும் தமிழ்நாட்டையும், தமிழக அரசியலையும், தமிழ் உணர்வுகளையும் அறிந்த யாருக்கும் தெரியும். அந்த விவகாரம். கடந்த 1991-ம் ஆண்டு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நம் நாட்டின் தமிழர்களான முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், பேரறிவாளன், ஜெயக்குமார், சாந்தன் ஆகியோரை பற்றிய வழக்குதான் அது என்பது. பின்  பெரும் முயற்சியால் இவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சிறையில் 28 ஆண்டுகளை கழித்துவிட்ட நிலையில், இவர்களை விடுவிக்கும் போராட்டம் கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. தமிழக அரசு சட்டமன்றத்திலேயே இது தொடர்பாக தீர்மானத்தை போட்டு, கவர்னருக்கு அனுப்பியும் விட்டது. ஆனால் கவர்னர் இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த நிலையில், இவர்களின் விடுதலை மனுவை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக ஒரே போடாக போட்டிருக்கிறது. 
தமிழ் உணர்வாளர்களின் மூச்சையே நிறுத்திவிடும் அளவுக்கு சென்சிடீவான இந்த  விவகாரத்தில் அடுத்தடுத்து வந்து விழும் சேதிகள் பெரும் அதிர்ச்சியை தருகின்றன. 

ஏழு பேரின் விடுதலை சாத்தியமே! அவர்களை வெளியில் விட சட்ட மற்றும் நிர்வாக ரீதியில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இன ரீதியாக இதை தடுக்கிறார்கள், தமிழர்கள் என்றால் அவ்வளவு வன்மமாக போய்விட்டது மத்திய அரசுக்கு! என்று போட்டுப் பொரிக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இந்த நிலையில், வழக்கறிஞர் சங்கரலிங்கம் இந்த விவகாரம் பற்றி தந்திருக்கும் தகவல் உறைய வைக்கிறது. அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?......“ஆயுள் தண்டனை என்பது ஒருவரின் ஆயுள் காலம் முடியும் வரையில் சிறையில் இருக்க வேண்டும் என்பதுதான். அதாவது அவர் சிறையிலேயே இறந்து, பிணமான பின் தான் வெளியே அனுப்புவார்கள். ஆனால் அதே நேரத்தில் அரசு நினைத்தால், குற்றத்தின் தன்மை, குற்றவாளியின் நடத்தை ஆகியவற்றைக் காரணம் காட்டி, விடுதலை செய்யலாம். 

ஆனால் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கை விசாரித்தது சி.பி.ஐ! எனவே என்னதான் தமிழக அரசு பரிந்துரை செய்தாலும் கூட, மத்திய உள்துறையை கலக்காமல் கவர்னர் முடிவெடுக்க மாட்டார். இவர்களை விடுவிக்க கூடாது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு. எனவேதான் ஏழு பேரின் விடுதலையானது கானல் நீராக போய்க் கொண்டிருக்கிறது. பொதுவாக அரசியல் கொலைக்கைதிகளை அரசு விடுவித்ததாக வரலாறே இல்லை.” என்று முடித்திருக்கிறார். 
அப்படியனால் இந்த ஏழு பேரும் இறுதி மூச்சு வரை சிறையில்தான் கிடக்க வேண்டுமோ!?பேரறிவாளனின் தாயான அற்புதத்தம்மாள், தன் மகனை எப்படியாவது வெளிக்கொணர படாத பாடு படுகிறார். ஆனால் இப்போது வெளியாகும் தகவல்கள்...அவரது கண்ணீருக்கு  விடை கிடைக்காது! என்பதையே உணர்த்துவதாக உள்ளன. 
பெரும் வேதனை!