தருமபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பி.பழனியப்பன், ஆர்.ஆர்.முருகன், டி.கே.ராஜேந்திரன், அவைத்தலைவர் அன்பழகன், கட்சியின் பொருளாளர் ரங்கசாமி, கட்சியின் மாநில நிர்வாகிகள் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, எஸ்.கே.செல்வம், வெங்கடாசலம், புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை கண்ட ஆளுங்கட்சி பீதி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய தினகரன், மக்களை பாதிக்கும் வகையில், எந்தவொரு திட்டம் வந்தாலும் தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று கூறினார்.

மஞ்சவாடி கணவாயில் இருந்து வரும் போது என்னை சந்தித்த இளைஞர்கள் எப்பாடு பட்டாவது சாலை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துங்கள். இதுவே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும். இந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று என்னிடம் கோரிக்கை விடுத்தனர். முட்டை விவகாரம் அணுகுண்டாக வெடிக்கும் என்று நான் அன்று சொன்னேன். அதேபோல் தற்போது அணுகுண்டாக வெடிக்க தொடங்கியுள்ளது என்றார்.  

8 வழிச்சாலை தொடர்பாக நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே இந்த ஆட்சிக்கு முடிவு வர வாய்ப்புள்ளது என்றார். 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மடியில் கனம் உள்ளது. துரோகிகள் நீண்ட காலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாது. இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராடுவோம் என டிடிவி தினகரன் கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில், அமமுக 37 தொகுதிகளிலும் வெற்றி பெறும், என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.