காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொது இடங்கள், கட்சி அலுவலகங்களில் பெரியார் சிலைகளை வைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது எங்களுக்கு ஏற்புடையது அல்ல. அதை நாங்கள் கண்டிக்கிறோம். தமிழகத்தில் அரிசி கடத்தலில் அதிகம் ஈடுபட்டவர்கள் திமுகவினர்தன். அதனால்தான் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வேளாண் சட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களுடைய பொய் பிரசாரம் எதுவும் எடுபடாது.

 
பாஜக ஒரு ஜனநாயக கட்சி. அந்தக் கட்சியில் ஹெச்.ராஜா இரண்டு முறை தேசிய செயலாளராக இருந்திருக்கிறார். ஹெச்.ராஜா இந்து தமிழர்களின் அற்புதமான தலைவர். அவருக்குரிய மரியாதை கட்சியில் நிச்சயம் இருக்கும், தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் நிச்சயமாக கிடைக்கும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணியை ரஜினிகாந்த் தொடங்கி விட்டார். ரஜினி மக்கள் மன்றம் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. வாக்குச்சாவடி வரையிலான பணிகள் நடைபெற்றுவருகின்றன. மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள். மக்கள் மத்தியில் ஆன்மிக அரசியல் எழுச்சி உருவாகிவிட்டது. ரஜினிகாந்த்தான் வருங்கால முதல்வர்.” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.