கன்னியாகுமரியை அடுத்த குழித்துறை சந்திப்பில் அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சிலையை அவமதித்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். பெரியாருக்கு காவி சாயம், எம்.ஜி.ஆருக்கு காவித் துண்டு என அணிவிக்கப்பட்டது சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள், கட்சிகள் செய்யும் இந்த செயலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், குமரி மாவட்டம்  குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை மீது அதிகாலையில் மர்ம  நபர்கள் பீடத்தில்  காவிக்கொடி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காவிக்கொடியை அப்புறப்படுத்தினர். மேலும், இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.