வேலைக்குச் செல்லும் பெண்களோ அல்லது வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் பெண்களோ இரவில் பத்திரமாக வருவதென்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது. தெலங்கானா மாநிலத்தில்  பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பஞ்சாப் அரசு பெண்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக வீடு திரும்ப புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர்  அம்ரீந்தர்சிங் அறிவித்தார்.

இந்த திட்டத்தின்படி இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக இலவசமாக போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை பெண்களுக்கான இலவச வாகன வசதி அளிக்கப்பட உள்ளது. இரவு நேரத்தில் வீடுதிரும்ப பாதுகாப்பான வாகனம் எதுவும் கிடைக்காதபட்சத்தில் இந்த சேவையை பெண்கள் பயன்படுத்தலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசர உதவி எண்கள் 100, 112, 181 ஆகியவற்றில் தொடர்புகொண்டு போலீசாரிடம் பாதுகாப்பான பயண வசதியை பெண்கள் கோரலாம். பெண் போலீஸ் ஒருவருடன் போலீஸ் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பெண் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச்செல்லப்படுவார்.

இந்த சேவையை பஞ்சாப் மாநிலம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர்  அம்ரீந்தர்சிங் அறிவுறுத்தி உள்ளார்.