திமுக தங்களுக்கு இந்தத் தொகுதி வேண்டும் என அடம்பிடித்த தொகுதி காரைக்குடி. ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் தங்களது கோட்டாவில் காரைக்குடியைக் காங்கிரஸுக்காக அடம்பிடித்துக் கேட்டு வாங்கினார்கள்.

இந்த தொகுதியில் தான் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். இதனால், சீமான்கள் சங்கடமாய் நினைப்பார்களோ என நினைத்து மற்ற காங்கிரஸ் தலைகள் யாரும் காரைக்குடி பக்கம் பிரச்சாரத்துக்குக்கூட எட்டிப் பார்க்கவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிகூட மேலூரில் இருந்தே வண்டியைத் திருப்பிவிட்டார். இதனிடையே காரைக்குடி திமுகவினர் சிலர் காங்கிரஸுக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்ததை உறுதிப்படுத்தும் ஆடியோ ஆதாரம் ஒன்றை ப.சிதம்பரத்திடம் கொடுத்தாராம் வேட்பாளர் மாங்குடி.

இதை உடனடியாக ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு சென்ற சிதம்பரம், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாராம். இந்த விவகாரம் இப்போது திமுகவினர் மத்தியில் தீயாய் பரவி வரும் நிலையில், “திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும். காங்கிரஸ்காரங்களே ‘கை சின்னத்துக்கு ஓட்டுப் போடாதே’என வீட்டுக்கு வீடுக்கு திண்ணைப் பிரச்சாரம் செய்தார்களே அவர்கள் மீது ப.சிதம்பரம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறாராம்?” என்று திமுக பக்கத்திலிருந்து எதிர் குரல் கிளம்பி உள்ளது.