ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். ஆறு பெண்களில் இரண்டு பெண்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும், மீதமுள்ள நான்கு பேர் சென்னையில் உள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
தனியார் தொழிற்சாலை வழங்கிய தரமற்ற உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் நிலை என்னவென்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பகுதியில் உள்ள கைப்பேசி தயாரிக்கும் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட மதிய உணவினை உண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 8 பெண்கள் கடுமையான பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வரும் செய்திகள் பேரதிர்ச்சியளிக்கிறது. பெண் தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியும், தொடர்புடைய தொழிற்சாலை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
தரமற்ற உணவை உண்டதால் பாதிக்கப்பட்ட பெண் தொழிலார்களின் நிலையை வெளிப்படையாக அறிவிக்காமல் மூடிமறைக்கின்ற தொழிற்சாலை நிர்வாகத்தின் செயலே பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொழிலாளர்களின் நலனில் அதிலும் குறிப்பாகப் பெண் தொழிலாளர்களின் நலனில் அதிக அக்கறையுடன் கூடுதல் கவனம் செலுத்திப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அரசு, பன்னாட்டுக் கூட்டிணைவு நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் போக்கு சிறிதும் நியாயமானதல்ல. உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்னவென்று தெரியாமல், அவர்களது குடும்பத்தினரும், உடன் பணியாற்றும் தோழியரும் பெரும் அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாகியுள்ளனர். ஆகவே, தமிழ்நாடு அரசு தனியார் தொழிற்சாலை விடுதியில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட சதியா என்பதையும், உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்களின் தற்போதைய உண்மையான நிலை என்னவென்பது குறித்தும் உரிய விசாரணை நடத்தி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இதேபோல், தரமற்ற உணவு சாப்பிட்டு தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்களின் நிலை என்ன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக நிறுவனத் தலைவர் பொதுச்செயலாளர் மகா கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கியுள்ள விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததாகவும், அந்த உணவை சாப்பிட்ட 150க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஆறு பேர் இறந்து விட்டதாக கூறி சக பெண் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதை செய்தி வாயிலாக அறிந்து கொண்டேன்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். ஆறு பெண்களில் இரண்டு பெண்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும், மீதமுள்ள நான்கு பேர் சென்னையில் உள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஆனால் அந்த நான்கு பேரின் நிலை என்ன தற்போது அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும், மேலும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டியது தனியார் தொழிற்சாலைகளின் கடமை. எனவே தொழிலாளர்களின் உயிருடன் விளையாடாமல் அவர்களுக்கு தரமான உணவு மற்றும் போதிய வசதிகளை தனியார் தொழிற்சாலைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
