ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளே உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கலாமா? என்றும் நடைபாதை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவானது முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று காலை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராணனிடம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடைபாதை ஓரங்களில் பேனர்கள் வைக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். வீட்டில் இருந்து நீதிமன்றம் வரும் வழியில் சாலையோரங்களில் இன்று கூட பேனர்களைப் பார்த்தேன்.

உயர்நீதிமன்ற உத்தரவை ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளே இப்படி அவமதிக்கலாமா? மேலும், நடைபாதை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், இனி அப்படி நடக்காது என்று அப்போது விளக்கம் அளித்திருந்தார்.