கன்னியாகுமரி அருகே மணல் திருடில் ஈடுபட்ட ஆளும்கட்சி முன்னாள் எம்எல்ஏவை கையும், களவுமாக பிடித்த பொது மக்கள் அவரை ஓட, ஓட விரட்டியடித்தனர்.

நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நேற்று நள்ளிரவு மூன்று லாரிகளுடன் ஆரல்வாய் மொழியை அடுத்த பழையாற்றில் மணல் திருடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த பொது மக்கள் முன்னாள் எம்எல்ஏவை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். மேலும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நாஞ்சில் முருகேசனை முற்றுகையிட்ட பொது மக்கள், மக்கள் பிரதிநிதியாக செயல்பட்ட ஒரு முன்னாள் எம்எல்ஏ, மணல் திருடலாமா ? என கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாஞ்சில் முருகேசன், பொது மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். லாரிகளையும், அவரது காரையும் பொதுமக்கள் சிறை பிடித்து வைத்துக் கொண்டனர்

பொது மக்களை எதிர்கொள்ள முடியாத நாஞ்சில் முருகேசன் தனது காரை விட்டவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், நாஞ்சில் முருகேசனின் காரையும், லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

மணல் திருடவந்த ஆளும் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவை பொது மக்கள் ஓட, ஓட விரட்டியடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.