மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் நிலவரம் குறித்து அதிமுக அமைச்சர்கள் அவ்வப்போது வாய் திறக்கும்போதெல்லாம் ‘அம்மா இட்லி சாப்பிட்டாங்க... சாம்பார் சாப்பிட்டாங்க’ என ஆளாளுக்கு கூறி மக்களை ஆசுவாசப்படுத்தி வந்தனர். அது உண்மையில்லை என நம்பாத மக்களே இனி நம்பாமல் இருந்தால் அதற்கு அப்பல்லோ நிர்வாகம் பொறுப்பல்ல. ஆம்... ஜெயலலிதா நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்திற்கு இட்லி மட்டுமே சாப்பிட்டதாக கணக்கு காட்டி இருக்கிறது அப்பல்லோ மருத்துவமனை. 

ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கு ரூ.6.85 கோடி செலவானதாகவும், அதில், 75 நாட்களில் உணவுக்கு மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் செலவானதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது.மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016 செப்டம்பர் மாத்ம் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார்.

 

அவரது மரணத்தில் சந்தாகம் இருப்பதாகக் கூறி பல்வேறு தரப்பினர் விசாரணை ஆணையம் அமைக்க கோரினர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார். அந்த ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டண விகிதங்களை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது.

அதில், அவரது சிகிச்சைக்கு மொத்தம் ரூ.6.85 கோடி செலவானதாகவும், உணவுக்கு - ரூ.1.17 கோடி செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அறை வாடகை - ரூ.24.19 லட்சம். பொதுவான அறை வாடகை - ரூ.1.24 கோடி. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்பீலேவுக்கு - ரூ.92.07 லட்சம்.

பிசியோதெரபி சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ரூ.1.29 கோடி. 2016 அக்டோபர் 13ம் தேதி காசோலையாக ரூ.41.13 லட்சம், ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், 2017 ஜூன் 15ல் ரூ.6 கோடி காசோலையாக அதிமுக கட்சி சார்பாக வழங்கப்பட்டது. மருத்துவமனைக்கு இன்னும் ரூ.44.56 லட்சம் பாக்கி உள்ளதாகவும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்குப் போராடி வந்த ஜெயலலிதா சாப்பாட்டு செலவு மட்டும் 75 நாட்களில் 1 கோடியே 17 லட்சம் ரூபாயா? என அதிர்ச்சியடைந்து வருகின்றனர் பொதுமக்கள். அப்பல்லோ கணக்குப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு ஜெயலலிதா சாப்பிட்டதாக கூறப்படும் தொகை 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மட்டுமே...