நிர்வாகிகள் நியமனத்தில் உதயநிதி நேரடியாக தலையிட ஆரம்பித்துள்ளதால் சீனியர்கள் சிலர் டென்சனில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

திமுக இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் இளைஞர் அணி செயல்பாடுகளில் மட்டும் தான் உதயநிதி ஆர்வம் காட்டி வந்தார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து புதியவர்களுக்கு பதவியை வழங்கினார். அப்போது அவரைத் தேடி வந்த மாவட்டச் செயலாளர்களை கூட தன்னை யாரும் பார்க்க வர வேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தார் உதயநிதி. இதனால் திமுகவின் பிற அணிகள் செயல்பாட்டில் உதயநிதி தலையிடமாட்டார் என்று அப்போது பேச்சுகள் அடிபட்டன.

ஆனால் கடந்த சில மாதங்களாக உதயநிதி செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இளைஞர் அணி மட்டும் அல்லாமல் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் வரை பலரிடம உதயநிதியே நேரடியாக தொடர்பு கொண்டு கட்சி செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதாகவும் சில உத்தரவுகளை பிறப்பிப்பதாகவும் சொல்கிறார்கள். அதுமட்டும் அல்லாமல் கட்சி நிர்வாகிகள் மீதான புகார்கள் தொடர்பான விசாரணையை கூட உதயநிதி நேரடியாக மேற்கொள்வதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.

கலைஞர் இருந்த போது ஸ்டாலின் செய்யாத சில விஷயங்களிலும் தற்போது ஸ்டாலினை வைத்துக் கொண்டே உதயநிதி தலையிடுவதாக புகார்கள் கூறப்படுகின்றன. அதிலும் அண்மையில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நியமனத்தில் உதயநிதியின் நேரடிய தலையீடு சீனியர்களை கொந்தளிக்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள். கட்சிக்கு பல வருடங்களாக சென்னையில் உழைத்த மூத்த நிர்வாகிகள் பலர் இருந்த நிலையில் தனக்கு நெருக்கமானவர் என்கிற ஒரே காரணத்திற்காக சிற்றரசு என்பவரை உதயநிதி மாவட்டச் செயலாளர் ஆக்கியுள்ளார்.

இதனால் அந்த பதவியை குறி வைத்திருந்த சீனியர்கள் மட்டும் அல்லாமல் வேறு பல கட்சிப் பதவிகளுக்காக காத்திருக்கும் சீனியர் நிர்வாகிகள் கூட ஏமாற்றம் அடைந்துள்ளதாக சொல்கிறார்கள். கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு நேரடியாக இளைஞர் அணியில் இருந்து நபர்கள் நியமிக்கப்படுவது இனி கட்சி எப்படி செயல்படும் என்பதை காட்டுவதாக சீனியர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். மிக மிக முக்கியமான சென்னை மாவட்டச் செயலாளர் பதவி நியமனத்திலேயே உதயநிதி தலையீடு இருக்கிறது என்றால் பிற நிர்வாகிகள் நியமனத்தில் எப்படி? என்றும் அவர்கள் தங்களுக்கு உள்ளாகவே கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

ஸ்டாலின் அதிகாரத்திற்கு வந்த பிறகு தங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று இத்தனை நாள் அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த பலலும் உதயநிதியின் திடீர் விஸ்வரூபத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க ஆரம்பித்துள்ளனர். கட்சிப் பதவிகளுக்கு இனி உதயநிதியை தான் தாஜா செய்ய வேண்டுமா? அப்படி என்றால் இத்தனை நாள் ஸ்டாலின் புராணம் பாடியது எல்லாம் வீணா? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பதவிகள் வேண்டும் என்றால்இனி புது ரூட்டில் பயணிக்க வேண்டும். அந்த ரூட்டை எப்படி பிடிப்பது என்று ஆயிரம் கேள்விகள் நிர்வாகிகள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இது போன்ற சமயத்தில் கட்சியில் திடீரென இப்படி ஏற்பட்டுள்ள அதிகார மையம் சீனியர்களை டென்சனாகவும் ஜூனியர்களை உற்சாகமாகவும் மாற்றியுள்ளதாக சொல்கிறார்கள். அதிலும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் இனி தங்கள் காட்டில் மழை என்று உற்சாகம் கரைபுரள பாடல் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.