Appearing For Arvind Kejriwal vs Centre Star Lawyer P Chidambaram

டெல்லியில் யாருக்கு அதிகாரம்? என்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு எதிராகவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

வழக்கு

யூனியன் பிரதேசமான டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அப்போதைய துணை நிலை ஆளுனராக இருந்த, நஜீப் ஜங் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அவர்களில், யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அரசியல் சாசன அமர்வு

இந்த வழக்கில் ‘‘துணை நிலை ஆளுனருடன் ஆலோசனை நடத்தாமல், முதல்வரோ, அமைச்சர்களோ எந்த முடிவையும் எடுக்க முடியாது'’ என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்குகளில், அரசியல் அமைப்புச் சட்டம் குறித்த கேள்வியும் எழுந்ததால், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு, விசாரணை மாற்றப்பட்டது.

ப.சிதம்பரம் ஆஜர்

இந்நிலையில் டெல்லி அரசு சார்பில் வாதாட உள்ள 9 வழக்கறிஞர்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் ஆஜராகி வாதாட உள்ளார்.

இவர் அரசியலமைப்பு சட்ட சிக்கல்கள் குறித்து டெல்லி அரசுக்கு தேவையான ஆலோசனை வழங்க இருக்கிறார்.

ஆரோக்கியமான அரசியல்

இது குறித்து டெல்லி அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சிதம்பரத்தை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்திருந்தாலும் கட்சி பேதமின்றி சிதம்பரம் ஆஜராக உள்ளது ஆரோக்கியமான அரசியல்தான்.

அவர் இதற்கு முன்னர் உள்துறை அமைச்சராக இருந்த போதே மத்திய அரசு- யூனியன் பிரதேச அரசு இடையேயான சட்ட விதிமுறைகளை நன்கு அறிந்தவர். எனவே இந்த வழக்கில் ஆஜராக உள்ளார்’’ என்றார்.