40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவிற்கு வர தயாராக இருந்தனர்.? ஸ்டாலின் சொன்ன பதில்- அப்பாவு பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக 40 எம்எல்ஏக்கள் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும், இது தொடர்பாக தனக்கு தூது வந்ததையடுத்து திமுக தலைவரான ஸ்டாலினிடம் தகவலை தெரிவித்ததாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதிமுக உட்கட்சி மோதல்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல வித குழப்பங்கள் உருவானது. அடுத்த தலைமை யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சசிகலா அதிமுக தலைமையாக பொறுப்பேற்றார். இதனை ஏற்றுக்கொள்ளாத ஓ.பன்னீர் செல்வம் தனியாக சென்று தர்மயுத்தம் மேற்கொண்டார். சில நாட்களிலேயே சசிகலாவும் சிறைக்கு சென்ற நிலையில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அப்போது மீண்டும் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக டிடிவி தினகரனை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக அதிமுகவில் குழப்பபான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து,
திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்.?
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்து அதிமுகவை தொடர்ந்து வழிநடத்தினர். தற்போது மீண்டும் ஒற்றை தலைமை கோரிக்கை எழுந்ததையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் மீண்டும் தனது தர்ம யுத்தம் இரண்டாவது பாகத்தை ஓ. பன்னீர் செல்வம் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசியவர், டிடிவி தினகரன் சிறைக்கு சென்றதையடுத்து அதிமுகவில் குழப்பமான நிலை ஏற்பட்டது. இதனால் என்ன செய்வது என்று அதிமுகவினர் இருந்தனர்.
ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்த அப்பாவு
அப்போது நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டார். அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுக அணிக்கு வர தயாராக இருப்பதாக தெரிவித்தார். எனவே இதனை திமுக தலைமையிடம் பேசி சொல்லுங்கள் என தெரிவித்தார். அப்போது இன்னும் 4 ஆண்டுகாலம் ஆட்சி இருந்தது. ஆட்சிக்கு வந்ததும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தினால் 2 கோடி பேருக்கு பதவி கொடுக்கலாம். கூட்டுறவுத்துறையில் பதவி கொடுக்கலாம் என நினைத்தேன். இதனையடுத்து உடனடியாக அப்போது எதிர்கட்சி தலைவராகவும், திமுக தலைவராகவும் இருந்த ஸ்டாலினை தொடர்பு கொண்டேன், 40 எம்எல்ஏக்கள் திமுகவிற்கு வர தயாராக இருப்பதாக தெரிவித்ததாக கூறினேன்.
மறுப்பு தெரிவித்த ஸ்டாலின்
இதற்கு அப்போது எந்தவித பதிலும் தெரிவிக்காத ஸ்டாலின், பின்னர் தொடர்பு கொள்கிறேன் என தெரிவித்து விட்டார். இதனையடுத்து 2 தினங்களுக்கு பிறகு மீண்டும் என்றை தொடர்பு கொண்டவர், 40 அதிமுக எம்எல்ஏக்களை நம்பி ஆட்சி அமைக்கலாம் என்று நினைத்து விட்டீர்களா.? ஒரு போதும் தேவையில்லை. மக்களை நேரடியாக சென்று சந்திப்போம் மக்கள் நமக்கு வாய்ப்பு தந்தால் ஆட்சி செய்வோம் என தெரிவித்தாக அப்பாவு தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
கேசிஆருக்கு அதிர்ச்சி கொடுத்து ஸ்டாலின்... தெலுங்கானா தேர்தலில் யாருக்கு ஆதரவு.? - திமுக அறிவிப்பு