Asianet News TamilAsianet News Tamil

சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் யாராக இருந்தாலும் சும்மா விடாதீங்க.. காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!

நம்பிக்கைக்கு முழுமையாக நீங்கள் பாத்திரமாக வேண்டும்.  காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இதனை காவல் துறைத் தலைவர் உறுதி செய்திட வேண்டும். 

Anyone who challenges law and order should not be left alone.. CM Stalin
Author
First Published Jan 20, 2023, 6:42 AM IST

கிராம மற்றும் நகர மக்கள் அமைப்புகளோடு அவ்வப்போது கலந்துரையாடி, அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து, மக்களோடு இணைந்து காவல் துறை அவர்களுக்கு ஓர் உண்மையான நண்பனாகத் திகழ வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு இவ்வரசின் தலைமையில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருவதால், முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகியவற்றை மிக அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறது என்று தெரிவித்தார்.  

இதையும் படிங்க;- தமிழ்நாட்டிற்கு தனி கொடி வேண்டும்..! பாஜகவினரை அலறவிடும் திமுக எம்எல்ஏவின் கோரிக்கை

Anyone who challenges law and order should not be left alone.. CM Stalin

கோயம்புத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவங்களில் நமது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, சிறப்பாக செயல்பட்ட போதிலும், இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்பாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க, காவல் துறையின் முக்கிய பிரிவுகளுக்கிடைய மேலும் வலுவான  ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருவது, தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் தொடர்ந்து புதிய தொழில்கள் பெருகும் வகையில், தொழில் அமைதி (Industrial peace) தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தொழில் அமைதிக்கு தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்றும், மாவட்டங்களில் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மாவட்டங்களில் கொலைக் குற்றங்கள், ஆதாயக் கொலைகள், கூட்டுக்கொள்ளைகள், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், இதுபோன்ற குற்ற சம்பங்கள் நடைபெறும் போது மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியினை விரைந்து மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து, கொள்ளை போன நகைகளை மீட்டு, இழந்தவர்களுக்குத் திரும்ப வழங்கும் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும்,  இதில் தாமதம் காணப்பட்டால், அது நீதிக்கு நாம் செய்யும் பிழையாகி விடும் என்று  முதலமைச்சர் தெரிவித்தார்.

Anyone who challenges law and order should not be left alone.. CM Stalin

காவல்துறையின் சிறப்பான, பாரபட்சமற்ற, திறமையான, துரிதமான பணியே, மக்களிடம் காவல்துறைக்கும் அரசுக்கும் நல்ல பெயரை ஈட்டித் தரும். சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் எந்த சக்திகளையும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. எவ்விதத் தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், “குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில்” மாவட்ட, மாநகரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள் முழுக் கவனம் செலுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார். புகார் அளிக்க வரும் ஏழை, எளிய மக்கள், குறிப்பாக பெண்கள் நடவடிக்கை கோரி அணுகும்போது, அவர்களை மனிதநேயத்தோடு அணுகி அவர்களது புகாரை பதிவு செய்து, உரிய மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அணுகுமுறை தான் காவல் துறையை மக்களுக்கு நண்பனாக்கும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்கள் சட்டம்-ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள். மத நல்லிணக்கமும், அனைவரிடமும் இணக்கமாக வாழும் தன்மையும் கொண்டவர்கள்.  இந்தச் சமூகக் கட்டமைப்பினை பத்திரமாக கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது என்றும், மாநில நுண்ணறிவுப் பிரிவு மற்றும் க்யூ பிரிவிலிருந்து அனுப்பப்படும் முக்கிய தகவல்களை உடனுக்குடன் கள விசாரணை செய்து, காவல் துறை தலைமையகத்துடன் முழுமையான ஒருங்கிணைப்போடு காவல் துறைக் கண்காணிப்பாளர்களும், ஆணையர்களும் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

காவல் கண்காணிப்பாளர்கள் களப் பணிக்கு முக்கியத்துவம் அளித்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், காவல் நிலையங்களுக்கும், துணைக் காவல் நிலையங்களுக்கும், சோதனை சாவடிகளுக்கும் அடிக்கடி நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், கிராம மற்றும் நகர மக்கள் அமைப்புகளோடு அவ்வப்போது கலந்துரையாடி, அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து, மக்களோடு இணைந்து காவல் துறை அவர்களுக்கு ஓர் உண்மையான நண்பனாகத் திகழ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க;-  2 ஆர்வக்கோளாறுகள்! உருட்டாமல் இருந்தால் சரி! விமான விவகாரத்தில் அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

Anyone who challenges law and order should not be left alone.. CM Stalin

ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் நிலைய அளவில் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பதியப்பட்ட புகார்களின் மீதான விசாரணை நிலை, கைது நடவடிக்கைகளை எந்த நிலையில் உள்ளன என்பதை கண்காணிக்க வேண்டும்,  ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள், பின்பற்றப்படாத நிகழ்வுகள் இருக்குமானால், சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேசமயம், சிறப்பாக மக்கள் பணியாற்றும் காவல் அலுவலர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக நீங்கள் பாத்திரமாக வேண்டும்.  காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இதனை காவல் துறைத் தலைவர் உறுதி செய்திட வேண்டும். இதைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.  இதைத்தான் மக்களும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.  இதை நீங்கள் செய்ய வேண்டும்.  செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர்  தெரிவித்தார்.   

Follow Us:
Download App:
  • android
  • ios