Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டிலிருந்து களங்கத்தை துடைக்கவே ரெய்டு..! தொண்டர்களை கடுப்பாக்கிய அன்வர் ராஜா..!

anwar raja mp opinion about raid in jayalalitha house
anwar raja mp opinion about raid in jayalalitha house
Author
First Published Nov 18, 2017, 11:28 AM IST


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை சுத்தப்படுத்தவே இந்த சோதனை உதவியாக இருக்கும் எனவும் ஜெயலலிதா வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அன்வர் ராஜா எம்பி தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, இரண்டு லேப்டாப்கள் மற்றும் 2 பென் டிரைவ்களை அதிகாரிகள் எடுத்து சென்றதாக விவேக் ஜெயராமன் தெரிவித்தார். ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதன் பின்னணியில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் துரோகம் இருப்பதாகவும் அதற்காக அவர்கள் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் எனவும் தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டில் நடத்தப்படும் சோதனையால் ஜெயலலிதாவிற்கு களங்கம் ஏற்படாது எனவும் களங்கம் துடைக்கப்படும் எனவும் பழனிசாமி ஆதரவாளரான அன்வர் ராஜா எம்பி தெரிவித்துள்ளார்.

சோதனையால் ஜெயலலிதாவிற்கு களங்கம் இல்லை. களங்கம் துடைக்கப்பட்டு ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை சுத்தப்படுத்த இந்த சோதனை உதவியாக இருக்கும். வருமான வரி சோதனையின் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

வருமான வரி சோதனை முடிவடைந்தபிறகு அதுதொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இது, அரசியல் உள்நோக்கம் கொண்டதா? இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியும்.

ஆனால், வருமான வரி சோதனையின் பின்னணியில் தமிழக அரசு இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை என அன்வர் ராஜா எம்பி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios