இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை குண்டுகளை வீசி அழித்தது. இதில் 250க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என பாஜக தலைவர் அமித்ஷா கூறினார். 

இதேபோன்று பிற பாஜக  தலைவர்களும் பேசினர். ஆனால் விமானப்படை எங்களுக்கான இலக்கை நாங்கள் தாக்கினோம் என்று மட்டும் தெரிவித்தது. இதனையடுத்து பயங்கரவாதிகள் சாவு எண்ணிக்கை தொடர்பாக பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. 

இந்நிலையில் பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த , எச்.ராஜாவிடம்,  கேள்வி கேட்பவர்களை ஆன்டி - இந்தியன் என்று சொல்கிறீர்கள்.. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்கிறீர்கள்.. என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

அதற்கு பதிலளித்து பேசிய எச்.ராஜா, நாட்டை வெட்டிப் பிளப்பேன் என்பவர்கள், தமிழ்நாடு இந்தியாவின் அண்டை நாடு என்பவர்கள் ஆன்டி - இந்தியன்தான். அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனை கொன்றபோது, அமெரிக்கர்கள் யாரும் பின்லேடனின் உடல் எங்கே என கேட்கவில்லை.

ஆனால், புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தினால், இறந்துபோன பாகிஸ்தான் வீரர்களின் உடலைக் காட்ட வேண்டுமெனக் கேட்கிறார்கள் சிலர். இப்படி ராணுவத்தை கேள்வி கேட்பது தேச விரோதமில்லையா.. அவர்கள் ஆன்டி – இந்தியன்தான் என கோபமாக பதில் அளித்துள்ளார்.