கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கரூர்  எம்.ஆர் விஜயபாஸ்கர், இவர் பதவியில் இருந்தபோது திமுக சார்பில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. 

அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் 21 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக 60 இடங்களுக்கு மேல் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக அமைந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், இவர் பதவியில் இருந்தபோது திமுக சார்பில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தால் ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவந்தார். இந்நிலையில் தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, கரூர் என தமிழகம் முழுவதும் அவரது வீடு அலுவலகம், மற்றும் அவருக்கு சொந்தமான சாயப்பட்டறை, அடுக்குமாடி குடியிருப்பு என 21 இடங்களில், 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சாய் கிருபா குடியிருப்பில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பல்வேறு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று முறைகேடாக கையொப்பம் வழங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக வந்த தொடர் புகாரின் பேரில் இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையில் முக்கிய சொத்து ஆவணங்களும், தனியார் நிறுவனங்களுக்கு கையொப்பமிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் தகவல் அதிகாரப்பூருவமாக தகவல் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.