எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை...! தொண்டர்களுக்கு சுடச்சுட காபி.. மதிய உணவு ரெடி..?
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் தொண்டர்களுக்கு சுடச்சுட காபி வழங்கப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்தவரில் முக்கியமானவர் இந்த வேலுமணி, உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு துறைகளில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக அப்போதே எஸ்.பி வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களாக இருந்த வீரமணி, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உள்ளிட்ட அமைச்சர்களின் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனைக்கு அதிமுக சார்பாக கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டப்பட்டது
கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது 15 லட்சம் ரூபாயும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில் வருமானத்தை விட கூடுதலாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கூறி எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடபெற்ற சோதனையின் போது எஸ்.பி.வேலுமணி வீடு முன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
அப்போது தொண்டர்களுக்கு ரோஸ்மில்க், காலை மற்றும் மதிய உணவு சுடச்சுட வழங்கப்பட்டது. தற்போதும் சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான தொண்டர்கள் எஸ்.பி.வேலுமணி வீடு முன் குவிந்துள்ளதால் தொண்டர்களுக்கு சுடச்சுட காபி வழங்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து சோதனை நடைபெறும் நேரத்தை பொறுத்து கூல்டிரிங்ஸ் மற்றும் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.