பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இஸ்லாமியர்களை சமாதானம் செய்யும் முயற்சியாக தமிழக சட்டப்பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தீவிரமாகியுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், மேற்குவங்கத்தில் கூட சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நீர்த்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் நீரு பூர்த்த நெருப்பாக தற்போதும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது. சென்னை வாண்ணாரப்பேட்டையில் 3 வாரங்களாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மயிலாடுதுறையிலும் இஸ்லாமிய பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் கோரிக்கை எல்லாம் ஒன்று தான், தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தக்கூடாது என்பது தான்.

மேலும் தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் தமிழக இஸ்லாமியர்களின் பிரதான கோரிக்கை. மேலும் சிஏஏ விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. இதனால் தான் சிஏஏ சட்டமே நிறைவேறியது என்று திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை திமுக ஒட்டு மொத்தமாக கபளீகரம் செய்துவிட்டதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த இஸ்லாமியர்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். மேலும் பாஜகவுடன் அதிக நெருக்கம் காட்டுவதால் அதிமுகவில் உள்ள இஸ்லாமியர்களே மேலிடம் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இஸ்லாமியர்களை சமாதானம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது ஒன்று தான் வழி என்கிற முடிவுக்கு எடப்பாடியார் வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கேரளா, பஞ்சாப் மாநிலங்களோடு பாஜக அங்கம் வகிக்கும் பீகார் மாநிலத்தில் கூட சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனால் தமிழகத்திலும் சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றினால் தமிழக இஸ்லாமியர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்த முடியும் என்று எடப்பாடியார் நம்புகிறார். மேலும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் சில முடிவுகளை நாங்களே சொந்தமாகவே எடுப்போம் என்று அரசியல் களத்தில் புரிய வைக்கவும் இந்த முடிவை அதிமுக எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு திரும்பியுள்ளனர் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி.

சந்திப்பின் போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தின் அம்சங்கள் குறித்து உள்துறை அமைச்சரிடம் விளக்கியதாகவும் கூறுகிறார்கள். எனவே விரைவில் கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேறும் என்கிறார்கள்.