குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை எழும்பூரில் பேரணி நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 8000 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடைபெற்று வருகிறது. இதேபோல தமிழகத்திலும் இந்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல் துறை நேற்று முன்தினம் மாலை வரை அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும் தடையை மீறி திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பேரணிக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் திமுக பேரணிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் அமைதியான முறையில் பேரணியை நடத்த வேண்டும் என்றும் வன்முறை ஏற்பட்டால் தலைவர்களே பொறுப்பு என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர் கலந்து கொண்டனர். இந்த பேரணியை கண்டு ஆளும் அதிமுக அரசு வியந்து போகும் அளவுக்கு சென்னை நகரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 8000 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுவது, தடையை மீறி போராட்டம் நடத்துவது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 143, 188, 341 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பொதுமக்களுக்கு இடையூறு செய்து போராட்டம் செய்த வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல் திருமாவளவன் உள்ளிட்ட 7 தலைவர்கள் ஆஜராக கோரி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.