தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டதால், திமுகவின் திட்டங்களும் மாறியுள்ளன. தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெறும் என்று திமுக எதிர்பார்த்தது. வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரலில் இருக்கும் என்று எதிர்பார்த்த திமுக, மார்ச் மாதத்தில் திருச்சியில் மாநாட்டையும் பொதுக்குழு கூட்டத்தையும் நடத்தத் திட்டமிட்டிருந்தது.
ஆனால், தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் திமுகவின் திட்டம் பணால் ஆகியுள்ளது. மார்ச் 12-ஆம் தேதியே வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதால், மாநாட்டை ஒத்தி வைக்க வேண்டிய நிலைக்கு திமுக ஆளாகியுள்ளது. மார்ச் 14ல் திருச்சியில் நடக்க இருந்த மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனும் அறிவித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டிலும் மார்ச் 27-ஆம் தேதி மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த திமுக முடிவு செய்து ஆயத்தமானது. ஆனால், அப்போதும் தேர்தல் முன்கூட்டியே ஏப்ரல் 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதால், மாநில மாநாட்டை திமுக ரத்து செய்தது.
அதேபோல இப்போதும் தேர்தல் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதால் திருச்சியில் நடத்த இருந்த திமுக மாநாடு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதேவேளையில் தேர்தலையொட்டி திமுக நடத்தும் மாநில மாநாடுகள் 1996, 2006, 2014 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திருச்சியில் திமுக நடத்திக்காட்டியது குறிப்பிடத்தக்கது.