தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழல் நிலவி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. வாக்குச் சீட்டு அச்சிடுதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோருதல், வார்டுகள் ஒதுக்கீடு, ஆசிரியர்களுக்குத் தேர்தல் பயிற்சி, சுயேச்சைகளுக்குச் சின்னங்கள் அறிவிப்பு எனத் தேர்தல் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

இதனிடையே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக சில விதிமுறைகளை விதித்து மாநிலத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதன்படி, சொந்த ஊரில் பணியாற்றும் அல்லது மூன்று வருடங்கள் ஒரே இடத்தில் பணிபுரியும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது. இதுபோலவே உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

எனினும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட நான்கு வாரங்கள் வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நாங்குநேரியில் வெற்றி பெற்றதற்கான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்று  நடைபெற்றது. அதில் பங்கெற்றும் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வர இருக்கிறது என தெரிவித்தார்.இந்த  தேர்தலிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று தெரிவித்தார்.