அண்ணாத்த ரஜினி பட போஸ்டருக்கு ரத்தாபிஷேகம்.. ரஜினி ரசிகர் மன்றம் கடும் கண்டனம்..!
அண்ணாத்த படத்தின் போஸ்டருக்கு ஆட்டை வெட்டி ரத்தாபிஷேகம் செய்ததற்கு ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்த்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் தோற்றம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியானது. படத்தின் முதல் தோற்றம் வெளியானதை அடுத்து சமூக ஊடகங்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில் ‘அண்ணாத்த’ முதல் தோற்ற பிளக்ஸ் முன்பு ரசிகர்கள் சிலர் ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தை அந்த பேனர் மீது அபிஷேகம் செய்தனர்.
வழக்கமாக கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள், இந்த முறை ரத்தாபிஷேகம் செய்த காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்தச் செயலை பலரும் கண்டித்தனர். இதைக் கண்டுகொள்ளாத ரஜினியையும் திட்டித் தீர்த்தனர். இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது".