தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு முதல் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில் தென் தமிழகத்தில் ஒரு திமுக நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட வெற்றி பெற மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்க தேவர் மீண்டும் தேவைப்படுகிறார்

தென்னிந்திய பார்வர்டு பிளாக் சார்பாக தேச ஒற்றுமை தென்மண்டல மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய அளவில் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தேவைப்படுகிறார். இன்றைய ஜாதி அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல், அடாவடித்தனமான அரசியல் இந்த நான்கையும் அழிக்க, நமக்கு தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் ஐயா மீண்டும் தேவைப்படுகிறார்.

திமுக வேட்பாளர் வெற்றி பெற முடியாது

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார். நேர்மையான அரசியலை செய்ய முடியும் என நிரூபித்த முத்துராமலிங்கத் தேவர் போல பத்து ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி புரிந்து வருகிறார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கால் நகத்தின் தூசிக்கு கூட திமுகவினர் ஈடாக மாட்டார்கள். பாராளுமன்றத்தில் தெய்வத்திருமகனார் தேவர் ஐயா சிலை, நமது முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் ஆட்சியில், அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் 2002 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடியும் அவர்களும் தேவர் ஐயா மீது மிகுந்த பற்று கொண்டவர்.தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு முதல் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தென் தமிழகத்தில் ஒரு திமுக நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட வெற்றி பெற மாட்டார்கள்.

450 எம்பிக்கள் வெற்றி பெறுவார்கள்

டெல்லியில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போதை பொருளை கடத்தி கைதாகி உள்ளனர். திமுக விசிக ஆகிய கட்சிகளை கொள்கை கூட்டணி என்பதை விட கடத்தல் கூட்டணி என சொல்லலாம். 450 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியாவில் பிரதமராக மீண்டும் மோடி வருவார். முத்துராமலிங்க தேவரின் வடிவில் இருக்கக்கூடிய பிரதமர் மோடியை தமிழக மக்கள் மீண்டும் பிரதமராக்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்

நாம் பெற்ற பிள்ளைக்கு திமுகவினர் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.. இதுதான் ஸ்டாலின் சாதனை- விளாசும் இபிஎஸ்