உளவுத்துறை அதிகாரியோடு ஆ.ராசா ரகசிய பேச்சு... திமுக பைலில் அடுத்த ஆடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த அண்ணாமலை
2ஜி வழக்கு நடைபெற்ற போது தமிழக உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட்டுடன் திமுக எம்பி ஆ.ராஜா தொலைப்பேசியில் பேசிய ஆடியோ பதிவை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
திமுகவின் பைல்ஸ் வெளியீடு
தமிழகத்தில் திமுகவிற்கு எதிராக அதிரடியாக அரசியல் செய்து வரும் அண்ணாமலை திமுக பைல்ஸ் என்ற தலைப்பில் திமுக தலைவர்கள் தொடர்பாக முறைகேடுகளை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே திமுக தலைவர்களின் சொத்து மதிப்புகள் தொடர்பாக பட்டியலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் பிடிஆரின் ஆடியோ பதிவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து கடந்த வாரம் டிஆர் பாலு தமிழக உளவுத்துறை அதிகாரியோடு பேசிய ஆடியோவை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், இன்று அடுத்த கட்டமாக 2ஜி வழக்கில் சிக்கியிருந்த ஆ.ராசா, வழக்கின் நிலை தொடர்பாகவும், தனக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை தொடர்பாகவும் அப்போது உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் ஷேட்டுன் பேசிய ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
2ஜி வழக்கு முறைகேட்டில் நடந்தது என்ன.?
திமுக- காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா, இவர் மீது ஒரு லட்சத்து 75ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஆ.ராசா குற்றமற்றவர் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனிடையே 2 ஜி வழக்கு தொடர்பாக தமிழகத்தில் உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டுடன் ஆ.ராசா தொலைப்பேசியில் பேசிய ஆடியோ பதிவை அண்ணாமலை தற்போது வெளியிட்டுள்ளார்.
திமுக பைல்ஸ் தொடரும்
இந்த ஆடியோவில் ஆ.ராஜா,தற்போது வழக்கு நிலை, சாதகமாக முடிவை கிடைக்க எடுத்த நடவடிக்கை தொடர்பாக பேசுகிறார். எனவே 2ஜி வழக்கு விசாரணை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எப்படி நடைபெற்றது என்பதற்கு இது ஒரு உதாரணம் என அண்ணாமலை கூறியுள்ளார். திமுக பைல்ஸ் தொகுப்பு முடிவடையாது தொடரும் எனவும் திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்
நிர்வாகத் தோல்விகளை மறைக்க, பாஜகவினரைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றும் திமுக - சீறும் அண்ணாமலை