தமிழ்நாடு பாஜக புதிய நிர்வாகிகளின் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக புதிய நிர்வாகிகளின் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த 4 பேர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், பாஜகவினர் சட்டசபைக்கு நுழைவது இதுவே முதல்முறையாகும். இதையடுத்து நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரானார். இதன் காரணமாக அவர் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பின்னர் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் தமிழக பாஜகவில் உள்ள நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அண்ணாமலை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்றும் தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக நிர்வாகிகளின் புதிய பட்டியலில், மாநில துணை தலைவராக இருந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரனிடம் இருந்து துணை தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக ஏ.பி.முருகானந்தம், சீனிவாசன், கார்த்தியாயினி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்த வினோஜ் பி.செல்வத்திற்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
