விக்னேஷ் மரணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனம் கொடுத்து நியாயம் கிடைக்க செய்வாரா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
விக்னேஷ் மரணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனம் கொடுத்து நியாயம் கிடைக்க செய்வாரா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அனைத்து காவல் நிலைய போலீசாரும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் புரசைவாக்கம் கெல்லிஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் கத்தி, கஞ்சா பொட்டலம் இருந்திருக்கிறது.

இதையடுத்து இருவரையும் விசாரணைக்காக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் என்ற 28 வயது இளைஞரும், பட்டினபாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 28 வயது இளைஞரும் தான் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள். பிடித்துச் சென்றவர்களை இரவில் விசாரணை நடத்தியதாக சொல்லப்பட்ட நிலையில் விக்னேஷ்க்கு காலையில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. உடனே அவரை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் விசாரணை என்கிற பெயரில் விக்னேஷை அடித்துக் கொன்று விட்டார்கள்.

சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம்சாட்டினார்கள். ஆனால் வலிப்பு ஏற்பட்டதால் தான் விக்னேஷ் உயிரிழந்தார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதையடுத்து விக்னேஷின் மர்ம மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் காவல்துறை விசாரணையின் போது, மர்மமான முறையில் விக்னேஷ் என்கின்ற இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவருடைய உடலையும் குடும்பத்தினருக்கு ஒப்படைக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல். தமிழக முதல்வர் கவனம் கொடுத்து நியாயம் கிடைக்க செய்வாரா? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
