ஹெலிகாப்டர் எரியும்போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயில் இருந்த ராணுவ வீரர்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டிருக்கிறார்கள். இதற்காக 100-க்கு 100 மதிப்பெண் வழங்க வேண்டும்.
தமிழக முதல்வரில் தொடங்கி கடைசி மனிதர் வரை, 3 நாட்களுக்கு தமிழக அரசு செய்த மீட்புப் பணியின் மூலம், இந்தியாவின் பெருமைமிகு மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டி உள்ளார்.
திருவண்ணாமலையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் மறைந்த சம்பவத்தின் போது மீட்புப் பணியில் தமிழக முதல்வரும் அரசு அதிகாரிகளும் உள்ளிட்ட குழுவினர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். மிகவும் துரிதமாகப் பணியைச் செய்தனர். ஹெலிகாப்டர் எரியும்போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயில் இருந்த ராணுவ வீரர்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டிருக்கிறார்கள். இதற்காக 100-க்கு 100 மதிப்பெண் வழங்க வேண்டும். 
தமிழக முதல்வரில் தொடங்கி கடைசி மனிதர் வரை, 3 நாட்களுக்கு தமிழக அரசு செய்த மீட்புப் பணியின் மூலம், இந்தியாவின் பெருமைமிகு மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பாஜக குற்றம் சுமத்தாது. இந்தச் சம்பவத்தில் நாங்கள் தமிழக அரசுடன் இருப்போம். உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க தமிழக பாஜக தயாராகவே இருக்கிறது. மத்தியில் உள்ள பாஜக அரசின் சாதனைகளையும் தமிழகத்தில் திமுக ஆட்சி செய்யும் தவறுகளையும் முன்வைத்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம். சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிடுபவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் தமிழக காவல் துறை கைது செய்கிறது. 
அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கவும் இதுபோல் செய்கின்றனர். அதே வேளையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர்கள் மீது எல்லாம் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். இனிமையான பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் கொண்டாட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகையைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். திமுக அமைச்சர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் தமிழக அரசின் துரித பணிகளையும் செயல்பாடுகளை அண்ணாமலை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
