தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா..? அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக போட்டியிட திட்டம் தீட்டி வரும் நிலையில், கர்நாடக மாநில தேர்தலில் அதிமுக பாஜக சீட் வழங்காத நிலையில் தனித்து போட்டியிட வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று பாஜக மற்றும் அதிமுகவினர் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
அதிமுக-பாஜக கூட்டணி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக -பாஜகவோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஒரு தொகுதி மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை அதிமுக இழந்தது. இந்தநிலையில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக- பாஜக கூட்டணி இணைந்து சந்திக்கும் என்ற தகவல் வெளியானது. ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ தேர்தலில் தனித்து போட்டியிட்டால் தான் கட்சியை வளர்க்க முடியும் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் மத்தியில் பேசியிருந்தார். இந்த தகவல் அதிமுக- பாஜகவினர் இடையே குழப்பமான சூழ்நிலை உருவானது. ஆனால் பாஜக மேலிடமோ தமிழகத்தில் அதிமுகவுடன் இணைந்து தான் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக அறிவித்து முற்றுப்புள்ளி வைத்தது.
அண்ணாமலை-இபிஎஸ் மோதல்
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. கொங்கு மண்டலத்தில் யாருக்கு அதிக செல்வாக்கு என்பதில் இரு தரப்புக்கும் இடையே ஈகோ ஏற்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலை தொடர்பான கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்காக ஏதோ ஏதோ அண்ணாமலை பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். இந்தநிலையில் கர்நாடக மாநில தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட அதிமுக திட்டமிட்டது. இதற்காக அதிமுக நிர்வாகிகள் பாஜக தலைமையை சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக உள்ள அண்ணாமலையின் அறிவுறுத்தல் காரணமாக அதிமுகவிற்கு சீட் கொடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது. இதனால் அதிமுக பாஜகவிற்கு எதிராக வேட்பாளரை அறிவித்துள்ளது.
முக்கிய ஆலோசனை
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜகவின் மையக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். அதே போல அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் ஏற்பாடுகள், கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்று இரு தரப்பிலும் நடைபெறவுள்ள கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
அண்ணாமலையை ரவுண்ட் கட்டும் திமுக.. உதயநிதியை தொடர்ந்து கனிமொழி எடுத்த அதிரடி முடிவு..!