அம்பானி சகோதரர்களில், அனில் அம்பானிக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ்’. இந்த நிறுவனம் , 40 வங்கிகள் மற்றும் நிறுவனங்களிடம் கடன் வாங்கியுள்ளது. 

விஜயா வங்கியில் மட்டும் ரூ. 46 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை.பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கி, ஐ.டி.பி.ஐ, ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட், எச்.எஸ்.பி.ஐ. வங்கிகள் மற்றும் சீன மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றிடமும் கடன் வாங்கியுள்ளது. 

மேலும் சுவீடனைச் சேர்ந்த ‘எரிக்சன்’ நிறுவனத்திற்கு மட்டும் ரூ.975 கோடி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடனை அடைப்பதற்கு, ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்க முயன்றும், பல்வேறு காரணங்களால் அதனை விற்க முடியவில்லை என்று அனில் அம்பானி கூறி வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் தன் சேவையை முற்றிலும் நிறுத்திக்கொண்டது. ‘ரியல் எஸ்டேட்’ வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்தது.

இந்நிலையில்தான், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேசன்’ நிறுவனம் சார்பில் அனில் அம்பானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரிலையன்ஸ் கம்யூனிகேசன் பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக, நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துகளை விற்க கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது. 

18 மாதங்கள் ஆன பிறகும், சொத்துகளை விற்க முடியவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்களுக்கு சிறிதளவு கூட திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில், கம்பெனியின் இயக்குநர்கள் குழு நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. அதில், கம்பெனியை திவால் ஆனதாக அறிவிக்க மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.. 
விஜய் மல்லையா, நீரவ் மோடியை அடுத்து தற்போது அந்த லிஸ்ட்டில் அனில் அம்பானியுன் இணைந்துள்ளார்.