சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டுச் செல்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் வாகனங்கள் பெருகிப்போனதால் கடும் டிராபிக் ஜாம் ஏற்பட்டு வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக  மறைமலைநகர் அருகே புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்படும் என மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆனால் அவர் மறைந்ததையடுத்து அந்த திட்டம் அப்படியே தற்போதைய அதிமுக அரசால் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து சென்னை நகருக்குள் வந்து செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது. இதனால் சென்னை நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தவிர்க்கும் வகையில் முதல் கட்டமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பேருந்துகள் மாதவரம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள  புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் (10.10.2018) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.