கொரோனாவால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 25-ம் தேதி காலமானார். அவருடைய மறைவுக்கு குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல  தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.  அவருடைய உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக போலீஸாரின் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தாதே சாகேப் பால்கே விருது, பாரத ரத்னா விருதுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல தரப்பினரும் வைத்துவருகிறார்கள். இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கிடையே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெலுங்கு மொழியில் பாடியதற்காக ஆந்திர அரசின் நந்தி விருதை 25 முறை பெற்றுள்ளார். இதேபோல தமிழக கர்நாடக அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளார். இசைக் கலைஞர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, பிஸ்மில்லா கான், லதா மங்கேஷ்கர் ஆகியோர் வரிசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையும் கவுரவிக்க வேண்டும். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.