Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவை துணைவேந்தர்கள் கெஞ்சுவதா?- அன்புமணி கண்டனம்

anbumani talks-about-sasikala
Author
First Published Dec 21, 2016, 2:44 PM IST


அதிமுகவுக்கு தலைமை ஏற்க சசிகலாவை , அரசு பதவியில் இருக்கும் துணை வேந்தர்கள் சந்தித்து கெஞ்சுவதா? என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர்  அன்புமணி ராமதாஸ் அறிக்கை:

தமிழ்நாட்டிலுள்ள பத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் சசிகலாவை சந்தித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர்  ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில், அவரது வழியில் அதிமுகவைத் தலைமையேற்று நடத்தும்படி வலியுறுத்தியதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் செய்தி வெளியாகியுள்ளது.

anbumani talks-about-sasikala

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையில் திருமதி. சசிகலாவைச் சந்தித்த குழுவில் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் இராமசாமி, தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.பாஸ்கரன், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி, சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், அம்பேத்கர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

உயர்கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர்களாக மாறி சசிகலாவை சந்தித்ததும், அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. 

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அலுவல் ரீதியாகவோ கல்வி வளர்ச்சி பற்றி விவாதிப்பதற்காகவோ முதலமைச்சரையோ, உயர்கல்வி அமைச்சரையோ சந்தித்து பேசியிருந்தால் அதில் எந்த சிக்கலும் இல்லை. மாறாக, ஆட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத திருமதி. சசிகலாவை, கல்வியாளர்கள் என்ற உயர்ந்த நிலையிலுள்ள துணைவேந்தர்கள் சந்தித்து அரசியல் பேசியிருப்பது  எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது ஆகும்; இது மிகவும் வெட்கக்கேடான செயல் ஆகும்.

anbumani talks-about-sasikala

 எந்த அதிகாரப் பொறுப்பிலும், பதவியிலும் இல்லாத சசிகலாவை சந்தித்தது தொடர்பாக துணைவேந்தர்களிடையே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை ஆகும். இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து கடந்த வாரம் ஓய்வுபெற்ற வணங்காமுடி,‘‘தமிழகத்தில் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இச்சந்திப்பு நிகழ்த்தப்பட்டது. 

பல்கலைக்கழகங்களுக்கு அரசு அதிகாரிகள் உதவி வழங்கியுள்ளனர். அதனால் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டியது அவசியம் என நாங்கள் கருதினோம். அதனால் தான் சசிகலாவை சந்தித்தோம்’’ என்று கூறியிருக்கிறார். இந்தக் கருத்து முழுக்க முழுக்க அரசியல்மயமானதும், பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பணி விதிகளுக்கு எதிரானதுமாகும்.

anbumani talks-about-sasikala

தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி இதுதொடர்பாக  கருத்து தெரிவிக்கும் போது,‘‘ பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து அதிக நிதி தேவைப்படுகிறது. அதனால் திருமதி. சசிகலாவை சந்தித்தோம்’’ என்று கூறியிருக்கிறார். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது....

1. பத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எந்த நோக்கத்திற்காக திருமதி. சசிகலாவை சந்தித்தனர்?

2. உயர்கல்வி வளர்ச்சி தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர் சங்கத் தேர்தல் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டப்படி சரியா?

3. திருமதி. சசிகலாவை சந்தித்தால் பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்கும் என்றால், அரசு நிர்வாகத்தில் அந்த அளவுக்கு சசிகலா ஆதிக்கம் செலுத்துகிறாரா?

4. 10 துணைவேந்தர்கள் திருமதி. சசிகலாவை சந்தித்திருப்பதால் இது திடீரென்றோ, தனித்தனியாகவோ  எடுக்கப்பட்ட முடிவாக இருக்க முடியாது. மாறாக நன்றாக ஆலோசனை நடத்தி அதனடிப்படையில்  தான் முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த சந்திப்புக்கு பல்கலைக் கழகங்களின் வேந்தரான ஆளுனரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா? என்பன உள்ளிட்ட வினாக்கள் எழுகின்றன. இதுகுறித்து அரசின் சார்பிலும், பல்கலைக்கழக நிர்வாகங்கள் சார்பிலும் விளக்கமளிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களிலும், துணை வேந்தர்கள் நியமனத்திலும் நடைபெறும் அரசியலை இச்சந்திப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், ஆட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருப்பவர்களின் ஆசி பெற்றவர்களுக்குத் தான் துணைவேந்தர் பதவி வழங்கப்படுவதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறது. 

அந்தக் குற்றச்சாற்றுகள் அனைத்தும் உண்மை என்பது இந்த சந்திப்பின் மூலம்  உறுதியாகியிருக்கிறது. தங்களுக்கு பதவி பெற்றுத் தந்தவர்களின் அழைப்பை நிராகரிக்க முடியாததாலும், அடுத்தடுத்த ஊழல்களுக்கு அனுமதி பெறுதற்காகவும் தான் கட்டாய அழைப்பை ஏற்று சசிகலாவை துணைவேந்தர்கள் சந்தித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

 இந்த அவப்பெயரை நீக்கும் வகையில், சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்கள் மீது விசாரணை நடத்த ஆளுனரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான வித்யாசாகர் ராவ் அவர்கள் ஆணையிட வேண்டும்; விசாரணை முடிவடையும் வரை அவர்களை பணிவிலக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

இனி வரும் காலங்களிலாவது அரசியல் கலப்பற்ற கல்வியாளர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமனம் செய்யும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios