முதல்வராக வேண்டும் என்ற கனவு தனக்கில்லை, ஆனால் பாமக ஆட்சியமைக்க வேண்டும் என்பதுதான் காடுவெட்டி குருவின் கடைசி ஆசை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சி நேற்று காடுவெட்டி கிராமத்தில் நடைபெற்றது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மணிமண்டபத்தைத் திறந்துவைத்த ராமதாஸ், குருவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, தமிழகத்தில் பாமக ஆட்சியமைக்க வேண்டும் என்பதுதான் காடுவெட்டி குருவின் கடைசி ஆசை. அவரின் கடைசி ஆசையை நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றுவோம். நிச்சயம் அது நடக்கும். நமது சமுதாய மக்களின் எண்ணிக்கைதான் நமது பலம். நமக்குள் ஒற்றுமையில்லாதது தான் பலவீனம். நாம் ஒற்றுமையாக இருந்தால் 120 சட்டமன்றத் தொகுதிகளில் தனித்து நின்று ஜெயிக்கலாம். தமிழகத்தை யார் யாரோ ஆண்டார்கள். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க என்று தான் கேட்கிறோம் என்று குறிப்பிட்டார்.

நான் முதல்வராக வேண்டும் என்பதோ மேடையிலிருக்கும் மற்றவர்கள் அமைச்சர்களாக வேண்டும் என்பதோ நமது கனவு கிடையாது, தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதும், நமது சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்பதும்தான் எங்களது எண்ணம். ஆட்சியில் இருந்தால் அது சுலபமாக முடியும் என்று பேசினார்.