ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்திடுக.!மீறினால் சிறை - அன்புமணி கோரிக்கை

சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் இடம்பெறாமல் இருப்பதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Anbumani requests to ban tobacco advertisements in Chennai IPL match

சென்னையில் ஐபிஎல் போட்டி

சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் தொடர்பாக முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில்,  ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்  போட்டிகள்  மார்ச் 31-ஆம் நாள் தொடங்கி மே  28-ஆம் நாள் வரை நடைபெறவுள்ளன. அவற்றில் ஏப்ரல் 3, 12, 21, 30, மே 6, 10, 14 ஆகிய நாட்களில் சென்னை சேப்பாக்கம் திடலில் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதால் அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன்.

Anbumani requests to ban tobacco advertisements in Chennai IPL match

புகையிலை விளம்பரம்

ஐ.பி.எல் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள்  இடம் பெறும் என்று நம்புவதற்கு வலிமையான காரணங்கள் உள்ளன. கிரிக்கெட் திடலில் புகையிலைப் பொருள் விளம்பரங்கள் வைக்கப்படுவதும், தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தப்படுவதும்  புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டப்படி குற்றம் (COTPA Act 2003) ஆகும். அதை சுட்டிக்காட்டி 2019-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அப்போதைய முதலமைச்சருக்கு கடிதம் எழுதினேன். பசுமைத்தாயகம் அமைப்பு போராட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து சேப்பாக்கம் திடலில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ‘பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார்’ உள்ளிட்ட எந்தவொரு புகையில்லா புகையிலைப் பொருள் விளம்பரங்களை காட்சிப்படுத்தக்கூடாது என்று 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம்  தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் அவர்கள் விரிவான கடிதம் எழுதியிருந்தார்.

Anbumani requests to ban tobacco advertisements in Chennai IPL match

புற்று நோயால் மரணம்

ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், 22.03.2023 அன்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா  இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது சேப்பாக்கம் திடலில் பான் பஹார், சைனி கைனி உள்ளிட்ட புகையற்ற புகையிலைப் பொருட்களின் (Smokeless Tobacco) விளம்பரங்கள் சட்ட விரோதமாக காட்சிப்படுத்தப்பட்டன. அதேபோன்ற தவறு ஏப்ரல், மாதங்களில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் நடக்கக்கூடாது என்பதற்காகவே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். புகையற்ற புகையிலைப் பொருட்கள் மக்களுக்கும் பெருந்தீங்கை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் இறந்து போகிறார்கள். 

Anbumani requests to ban tobacco advertisements in Chennai IPL match

இந்தியாவில் நிகழும் பத்து மரணங்களில் ஒன்றிற்கு புகையிலைப் பழக்கம் காரணமாக உள்ளது. பீடி, சிகரெட் போன்ற புகைபிடிக்கும் பழக்கத்தை விட - குட்கா, பான்மசாலா, கைனி போன்ற புகையற்ற புகையிலைப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 21.4% பேர் புகையற்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதே வயது பிரிவினரில் புகை பிடிப்போர் அளவு 10.7%  மட்டுமே. புகையற்ற புகையிலை பழக்கம் என்பது புகையிலையை பற்றவைத்து புகையை உள்ளிழுக்காமல்- புகையிலை பொருட்களை வாய்வழியாகவோ, மூக்குவழியாகவோ நேரடியாக உட்கொள்ளும் பழக்கம் ஆகும். இப்பழக்கம் மனிதர்களை மிக அதிகமாக அடிமையாக்கக் கூடியதாகும். வாய் மற்றும் கழுத்துப் பகுதி புற்றுநோய்களுக்கு இது காரணமாகும். 

Anbumani requests to ban tobacco advertisements in Chennai IPL match

இந்தியா விளையாட்டு தேசம் என்பதால், ரசிகர்களின் விளையாட்டு மோகத்தை பயன்படுத்தி, அவர்களிடம் புகையில்லா புகையிலைப் பொருட்கள் விளம்பரம் வழியாக திணிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. இந்தியாவில் மிகப்பிரபலமான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட் தான்.  இந்திய ஒலிபரப்பு வாடிக்கையாளர் ஆய்வு நிறுவனத்தின் 2018&ஆம் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் 76.6 கோடி பேர் விளையாட்டுகளை தொலைக்காட்சிகள் மூலம் பார்க்கின்றனர். அவர்களில் 93% பேர் கிரிக்கெட்டை பார்க்கிறார்கள். அவர்களில் 52% பேர் 30 வயதுக்கு கீழான இளைஞர்கள் ஆகும். 2019 ஐபிஎல் போட்டிகளின் போது மட்டும் 10,452 முறை ‘பான் மசாலா, சர்தா, குட்கா’ஆகிய புகையற்ற புகையிலை விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளின் போது மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்கள் பட்டியலில் இது மூன்றாவது இடத்தில் வந்துள்ளது. 

Anbumani requests to ban tobacco advertisements in Chennai IPL match

எனவே, கிரிக்கெட் போட்டிகள் மூலம் மேற்கொள்ளப்படும் புகையற்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்கள் அனைத்தும் சட்டவிரோதம் ஆகும். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மேற்படி சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் ஐந்து ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. எனவே, 2023 ஏப்ரல், மே மாதங்களில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் போது புகையற்ற புகையிலைப் பொருள் (Smokeless Tobacco) விளம்பரங்கள் காட்சிப் படுத்தப்படுவதும், அவை தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தப்படுவதும் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். அதனை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அன்புமணி அந்த கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

IPL 2023: முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios