கடந்த சில மாதங்களாக ரஜினி கூறி வரும் விஷயத்தையே பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசும் கூறியிருப்பது அக்கட்சியினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தனிக்கட்சி துவங்கி அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31ந் தேதி ரஜினிகாந்த் அறிவித்தார். அப்போது பேசிய அவர், பதவிக்கு ஆசைப்பட்டு, பணத்திற்கு ஆசைப்பட்டு அரசியலுக்கு வருபவர்கள் தன்னுடன் இருக்க வேண்டாம் என்று கூறினார். மேலும் பணத்திற்காக அரசியலுக்கு வருபவர்களை தனக்கு அருகில் கூட வைத்திருக்கப்போவதில்லை என்றும் ரஜினி கூறினார்.

இதனை தொடர்ந்து மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் நியமனத்தில் ரஜினி தீவிரம் காட்டினர். நிர்வாகிகள் நியமனம் முடிந்த கையோடு பிரச்சனை வெடித்தது. பழைய நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படாமல் முரண்டு பிடித்தனர். மேலும் மக்கள் மன்றம் பெயரை கூறி சில ரசிகர்கள் வசூல் வேட்டையில் இறங்கினர். இதனால் நிர்வாகிகள் பலரை ரஜினி மன்றத்தில் இருந்து நீக்கினார்.

அப்போது ரஜினிக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டு தாங்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறி ராமநாதபுரம், கடலூர் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். சில ரசிகர்கள் ரஜினி வீட்டுக்கு அருகே சென்று போராட்டம் நடத்தினர். இதனால் கடுப்பான ரஜினி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் பணத்திற்கு ஆசைபட்டு அரசியலுக்கு வருபவர்கள் தன்னுடைய மன்றத்தில் நிர்வாகிகளாக இருக்க முடியாது என்று அறிக்கை வெளியிட்டார். 

இதன் மூலம் ரஜினி தான் கடந்த ஆண்டு கூறிய பணத்தாசை உடையவர்களை கூட வைத்துக் கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் என்கிற பேச்சு எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் பா.ம.க மாணவரணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அன்புமணி, பா.ம.க தற்போது கொள்கை ரீதியாக இயங்கும் ஒரு இயக்கம் என்று கூறினார்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் அரசியலுக்கு வருபவர்களுக்கு பா.ம.கவில் இடம் இல்லை என்று அன்புமணி கூறினார். ரஜினி கடந்த ஒரு வருடமாக கூறி வருவதை அன்புமணி தற்போது கூறியுள்ளது அவரது கட்சியினரையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.