Asianet News TamilAsianet News Tamil

போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகும் சிசிடிவி காட்சிகள் சென்னையில் பதிவாகணும்... சிஸ்டத்தை மாற்ற அன்புமணி சரவெடி யோசனை!

“காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் பொது ஆவணங்கள். அவை அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். ஏதேனும் சாட்சிக்காக பொதுமக்கள் தரப்பிலிருந்து கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் கோரப்பட்டால், அவற்றை காவல் நிலைய நிர்வாகம் வழங்க வேண்டும்’’ என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. 

Anbumani Ramadoss on sathankulam police station issue
Author
Chennai, First Published Jul 2, 2020, 8:41 PM IST

கண்காணிப்பு காமிராக்களின் காட்சிகள் சென்னையில் புதிதாக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.Anbumani Ramadoss on sathankulam police station issue
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நிகழ்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோரின் சித்திரவதைக் கொலைகள் நாடு முழுவதும் உள்ளவர்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. அவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காவலர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் ஆணைப்படி இந்த வழக்கை சி.பி.சி.ஐடி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி காமிரா காட்சிகள் முழுமையாக பதிவாகியிருந்தால், அதைக் கொண்டே தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். தேவையற்ற சர்ச்சைகள் எதுவும் ஏற்பட்டிருக்காது. ஆனால், அக்காவல் நிலைய கண்காணிப்பு காமிராவில் பதிவாகும் அனைத்துக் காட்சிகளும் அடுத்த நாளே அழிந்து விடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு விட்டன.Anbumani Ramadoss on sathankulam police station issue
“காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் பொது ஆவணங்கள். அவை அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். ஏதேனும் சாட்சிக்காக பொதுமக்கள் தரப்பிலிருந்து கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் கோரப்பட்டால், அவற்றை காவல் நிலைய நிர்வாகம் வழங்க வேண்டும்’’ என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், அத்தீர்ப்புக்கு மாறாக காவல்நிலைய கண்காணிப்பு காமிரா பதிவுகள் ஒரே நாளில் அழிந்து விடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அந்தக் காவல் நிலையத்தில் தொடர்ந்து தவறுகள் நடப்பதாகவும், அதை மறைக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் எண்ணத் தோன்றுகிறது.
அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் குற்றப்புலனாய்வில் கண்காணிப்பு காமிராக்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குற்றங்களைத் தடுப்பதற்காகவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்வதற்காகவும்தான் சென்னை போன்ற நகரங்களின் சாலைகளில் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு காமிரா வீதம் அமைக்கப்பட்டிருக்கிறது. சாலைகளில் எதற்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவோ, அதற்கான காரணங்கள் அனைத்தும் காவல் நிலையங்களுக்கும் பொருந்தும். இனி வரும் காலங்களிலாவது காவல் நிலையங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு காமிராக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.Anbumani Ramadoss on sathankulam police station issue
காவல் நிலையங்களில் குற்றங்கள் நடப்பதைத் தடுக்க, கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, ‘‘காவல்நிலையங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. தமிழகம் முழுவதும் உள்ள 1567 காவல் நிலையங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படும் காவல்நிலையங்களில் வரவேற்பரை, நுழைவாயில், லாக்கப் ஆகிய இடங்களில் தலா ஒரு காமிரா வீதம் மொத்தம் 3 காமிராக்கள் அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2020-ம் ஆண்டுக்குள் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும்” என்று தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான காவல் நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், காவல் நிலைய கண்காணிப்பு காமிராக்களின் இயக்கம், பதிவு ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்தால், சாத்தான்குளத்தில் செய்யப்பட்டது போன்று காமிராக்களில் பதிவான காட்சிகள் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது. அதைக் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். காவல் நிலையங்களில் காமிராக்களை நிறுவும் பொறுப்பும், அவற்றை இயக்கும் பொறுப்பும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சைபர்கிரைம் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த காவலர்களைக் கொண்டு அமைக்கப்படும் தனிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கண்காணிப்பு காமிராக்களின் காட்சிகள் சென்னையில் புதிதாக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு காமிராவிலும் பதிவாகும் காட்சிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆவணப்படுத்தப்பட்டு சேமித்து வைக்கப்பட வேண்டும். Anbumani Ramadoss on sathankulam police station issue
அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட காட்சிகள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். இது கடினமானதோ, சாத்தியமற்றதோ இல்லை. சென்னை மாநகர சாலைகளில் மட்டும் சுமார் 4 லட்சம் காமிராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றில் பதிவாகும் காட்சிகள் சேகரிக்கப்படும் போது, தமிழகக் காவல்நிலையங்களில் அதிகபட்சமாக உள்ள 5 ஆயிரம் காமிராக்களின் பதிவுகளை சேகரித்து வைப்பது கடினமானது அல்ல; மிக எளிமையானது. எனவே, தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகளை பதிவு செய்வதற்காக சென்னையில் தனி கட்டுப்பாட்டு அறையை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டு காவல்நிலையங்கள் குற்றம் நடக்காத பகுதிகளாக, மனித உரிமைகள் மதிக்கப்படும் இடமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios