Asianet News TamilAsianet News Tamil

ஊரடங்கிலிருந்து விலக்குக் கொடுக்காதீங்க... தாழியை உடைச்சிடாதீங்க... கறார் குரலில் அன்புமணி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடிக்குமா... குறையத் தொடங்குமா? என்பதை அறிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அடுத்த சில நாட்களில் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தொழிற்சாலைகளின் இயக்கத்தைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோருவது நிலைமையின் தீவிரத்தை உணராமல் எடுக்கப்பட்ட முடிவாகவே தோன்றுகிறது.

Anbumani Ramadoss on Industries secretary's relax letter from curfew
Author
Chennai, First Published Apr 13, 2020, 8:48 PM IST

16 வகையான தொழில்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய தொழில் துறை செயலாளரின் கோரிக்கை, வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதற்கு சமம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு ஆணையை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை அனைத்து மாநில அரசுகளும் ஒரே குரலில் வலியுறுத்தி வரும் நிலையில், 16 வகையான தொழில்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை செயலர் கடிதம் எழுதியிருக்கிறார். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதற்கு சமமான இந்த யோசனை நிராகரிக்கப்பட வேண்டும்.

Anbumani Ramadoss on Industries secretary's relax letter from curfew
மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவுக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை செயலர் குருபிரசாத் மகோபாத்ரா எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், மக்களின் கைகளில் பணம் புழங்குவதை உறுதி செய்யவும் உர ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் உள்ளிட்ட 16 வகையான தொழிற்சாலைகளை இயக்க வசதியாக ஊரடங்கு ஆணையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். தொழில் மற்றும் வணிகம் சார்ந்த பெரும்பான்மையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும் யோசனை வழங்கியுள்ளார். இவை தவறான நேரத்தில் முன்வைக்கப்படும் மிகத் தவறான யோசனைகள். இந்த கோரிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கக் கூடாது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு முதற்கட்டமாக அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கில், இன்றுடன் 20 நாட்கள் முடிவடையும் நிலையில், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது என்பது உண்மைதான். அதேநேரத்தில் நோய்ப்பரவல் இன்னும் உச்சத்தை அடைந்து குறையத் தொடங்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடிக்குமா... குறையத் தொடங்குமா? என்பதை அறிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அடுத்த சில நாட்களில் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தொழிற்சாலைகளின் இயக்கத்தைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோருவது நிலைமையின் தீவிரத்தை உணராமல் எடுக்கப்பட்ட முடிவாகவே தோன்றுகிறது.Anbumani Ramadoss on Industries secretary's relax letter from curfew
ஏற்றுமதி வாய்ப்பு கொண்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும்; 16 வகையான கனரக ஆலைகள் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தொழில்துறை கோரியிருக்கிறது. இதேதுறை கடந்த காலங்களில் வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இத்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை 35 கோடி. அவர்களின் நான்கில் ஒரு பங்கினர், அதாவது 9 கோடி பேர் ஊரடங்கிலிருந்து வெளியில் வந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். எந்த நோக்கத்திற்காக ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைக்கப்பட்டு விடும்.
ஊரடங்கு ஆணையை பிறப்பித்து கடந்த மார்ச் 24-ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ‘‘வீட்டுக்கு வெளியே ஓரடி எடுத்து வைத்தால் கூட கொரோனா வைரஸ் நோயை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்றுதான் பொருள். எனவே, அனைவரும் ஊரடங்கை கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். பிரதமர் கூறியதை விட மோசமான சூழல் இப்போது இருக்கும் நிலையில், 9 கோடி தொழிலாளர்களை வீடுகளை விட்டு வெளியேறி தொழிற்சாலைகளுக்கு சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று கோருவது நியாயமற்றதாகும்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை பாராட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம், அதேநேரத்தில் பெருநிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று, கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், கொடூரமான வைரஸ் மீண்டும் துளித்தெழும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீனாவின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் இதை உறுதி செய்கின்றன. இத்தகைய நேரத்தில் மத்திய அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

Anbumani Ramadoss on Industries secretary's relax letter from curfew
இந்தியாவில் முதற்கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் அடுத்தகட்டமாக முதலில் இரு வாரங்களுக்கும், பின்னர் மேலும் ஒரு வாரத்திற்கும், அதாவது மே மாத முதல் வாரம் வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும். அதன்பின்னர் நாட்டில் மொத்தமுள்ள 736 மாவட்டங்களில் கொரோனா வைரசால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 300 மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும். மற்ற மாவட்டங்களில் மே முதல் வாரத்திற்கு பிறகு ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்தலாம். அவ்வாறு செய்வதற்கு பதிலாக அவசரப்பட்டு 16 வகையான தொழிற்சாலைகளை திறக்க அனுமதித்தால், அதன் மூலம் எந்த அளவுக்கு பொருளாதாரப் பயன்கள் கிடைக்குமோ, அதை விட 5 மடங்குக்கும் கூடுதலான பொருளாதார வீழ்ச்சி நோய்ப்பரவல் காரணமாக ஏற்படும் என்பதை அரசு உணர வேண்டும்.
இந்தியாவுக்கு இன்றைய சூழலில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள்தான் மிகவும் அவசியமாகும். பொருளாதார நடவடிக்கைகள் குறித்து சிந்திப்ப்பதற்கான தருணம் இன்னும் கனியவில்லை. எனவே, உணவு, விவசாயம், மருந்து உற்பத்தி மற்றும் வினியோகம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தவிர மீதமுள்ள எந்தவிதமான தொழிற்சாலைகளையும் இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios