மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முறைகேடு செய்ததாக வழக்கு பதியப்பட்டது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த விசாரணையை மீண்டு தூசி தட்டி எடுக்க சி.பி.ஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் லக்னோ மற்றும் இந்தூரில் தகுதி இல்லாத இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு 2008ம் ஆண்டு முறைகேடாக அனுமதி வழங்கியதாக அன்புமணி உள்பட 15 பேர் மீது சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு டெல்லி பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கடந்த 2015-ம் ஆண்டு 5 மருத்துவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது நீதிமன்றம். ஆனால், அன்புமணி ராமதாஸ் உள்பட 10 பேர் மீது குற்றப்பதிவு செய்து வழக்கை தொடர்ந்து விசாரிக்க சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அன்புமணி உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தடை கோரி மனுதாக்கல் செய்தனர். கடந்த 4 ஆண்டுகளாக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

மத்திய அரசின் அனுமதி வழங்குவதற்காக தனியார் கல்லூரிகளை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை, மனுதாரர்களுக்கும் வழங்கிய பின்னர், சி.பி.ஐ நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அன்புமணி உள்ளிட்டோர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜராகவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.