எம்.பி., தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி! அன்புமணி ராமதாசின் புதிய மூவ்! 

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டுள்ளதாக பேசப்படுகிறது.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க – தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ் மட்டுமே வெற்றி பெற்றார். சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய நிலையில் ஒரு இடத்தில் கூட பா.ம.க வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. 

இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய எம்.பி., பதவியை தக்க வைக்க வேண்டும் என்றால் கூட்டணி அவசியம் என்கிற முடிவுக்கு அன்புமணி வந்துள்ளார்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.கவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் திட்டத்தில் அன்புமணிக்கு துளி அளவு கூட கிடையாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலை போல மூன்றாவதாக ஒரு அணி அமையும் பட்சத்தில் அதில் இடம்பெற்று போட்டியிட வேண்டும் என்பது தான் அன்புமணியின் திட்டமாக உள்ளது. 

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3வது அணி அமைவதற்கான வாய்ப்புகள் தற்போது வரை தென்படவில்லை. எனவே 3வது அணியை அமைக்கும் முயற்சியில் களம் இறங்க அன்புமணி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதிலும் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையும் பட்சத்தில் கூடுதல் பலம் என்று அன்புமணி கணக்கு போடுகிறார். 

தற்போதைய சூழலில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் உள்ளது. ஆனால் பா.ஜ.கவோ தி.மு.கவுடன் கூட்டணி சேர பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறது. எனவே கடைசி நேரத்தில் கழட்டிவிடப்படலாம் என்பது காங்கிரசுக்கும் தெரியும். இதனை பயன்படுத்தி தினகரன் – கமல் – தே.மு.தி.க உள்ளிட்டோருடன் இணைந்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஒன்றை அமைக்கும் பட்சத்தில் எம்.பி., தேர்தலில் மீண்டும் தருமபுரியில் வெற்றி பெறலாம் என்று  அன்புமணி கணக்கு போடுகிறார்.

இதன் காரணமாகவே பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு பா.ம.க ஆதரவு அளித்துள்ளது. கடந்த காலங்களில் தி.மு.க நடத்திய எந்த போராட்டத்திற்கும் அன்புமணி ஆதரவு கொடுத்தது இல்லை. ஆனால் காங்கிரஸ் முழு அடைப்பிற்கு அன்புமணி வழிய சென்று ஆதரவு கொடுத்ததில் இருந்தே அவருக்கு காங்கிரஸ் மீது ஒரு கண் இருப்பது தெரியவந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.