Asianet News TamilAsianet News Tamil

கூட்டணி அமைத்து பால் விலையை உயர்த்தும் தனியார் நிறுவனங்கள்..! தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது!- அன்புமணி

படிப்படியாக ஆவின் பால் உற்பத்தியை அதிகரித்து தனியார் நிறுவனங்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

Anbumani insisted that steps should be taken to control the rise in private milk prices
Author
First Published Oct 19, 2022, 10:44 AM IST

தனியார் பால் விலை உயர்வு

தனியார் பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் நடப்பாண்டில் நான்காவது முறையாக பால் விலையை உயர்த்தவுள்ளன. தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை பால் விலையை உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள பால் மொத்த விற்பனையாளர்களுக்கு தனியார் பால் நிறுவனங்கள் கடந்த வாரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாகவும், இந்த வாரத்தின் இறுதியில் விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி 3% கொழுப்புச் சத்துள்ள பாலின் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6% கொழுப்புச் சத்துக் கொண்ட நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ.72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நியாயமில்லாதது.

பால் விலை உயர்வு- மக்களை ஏமாற்றும் செயல்

ஆவினில் 3% கொழுப்புச் சத்துள்ள பால் லிட்டர் ரூ.40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் பால் விலை அதை விட 25% அதிகமாக உள்ளது. 6% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் பாலின் விலை லிட்டர் ரூ.48 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள் 50% விலை உயர்த்தி ரூ.72-க்கு விற்பனை செய்கின்றன. பாலின் விலையில் அதிகபட்சமாக 5% வரை வித்தியாசம் இருக்கலாம். ஆனால், பாலின் விலையில் 50% வித்தியாசம் இருப்பதும், ஆண்டுக்கு 4 முறை தனியார் நிறுவனங்கள்  பால் விலையை உயர்த்துவதும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவையாகும். பால் கொள்முதல் விலை அதிகரித்திருப்பதும், பாலை அடைத்து விற்பதற்கான பிளாஸ்டிக் உறைகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதும் தான் பால் விலை உயர்வுக்கு காரணம் என்று தனியார் நிறுவனங்களின் தரப்பில் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கும் கொள்முதல் விலை உயர்த்தப்படவே இல்லை என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடலில் "SITRANG" புயல் உருவாகிறது.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தனியார் நிறுவனங்கள் கூட்டணி

அதேபோல், பிளாஸ்டிக் உறைகள் தயாரிப்பு செலவு என்பது மிக மிக குறைவான ஒன்றாகும். அதைக் காரணம் காட்டி பால்விலை உயர்த்தப்படுவதாக தனியார் பால் நிறுவனங்கள் கூறுவது பால் உற்பத்தியாளர்களையும், மக்களையும் ஏமாற்றும் செயலாகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தனியார் பால் விலை உயர்த்தப்படுவது இது ஆறாவது முறையாகும். இந்த குறுகிய காலத்தில் எந்த அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இந்த அளவுக்கு உயர்த்தப் படவில்லை. தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு பால் விலையை உயர்த்துவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. இத்தகைய சூழலில் பால் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டால் தமிழகத்தில் ஏழை & நடுத்தர மக்கள் வாழ முடியாத அவல நிலை உருவாகி விடும். 

ஓபிஎஸ்யை கட்சியை விட்டு நீக்கியாச்சு..! எங்களுக்கே அதிகாரம் உள்ளது...! களத்தில் இறங்கிய திண்டுக்கல் சீனிவாசன்

 வேடிக்கை பார்க்க கூடாது

வலிமையான நிலைக்கு ஆவின் உயர்ந்தால் தான் பால் சந்தையில் தனியார் நிறுவனங்களின் விலைக் கொள்ளையை தடுக்க முடியும். இதை கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வரும் போதிலும், அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை கட்டுக்குள் அடங்காமல் உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அதை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையாக பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைத்து, பாலுக்கான அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்க  வேண்டும். அத்துடன் படிப்படியாக ஆவின்   பால் உற்பத்தியை அதிகரித்து தனியார் நிறுவனங்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

Diwali : தீபாவளி சிறப்பு ரயில்களில் இன்றுமுதல் முன்பதிவு.. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு..விவரம் இங்கே..

 

Follow Us:
Download App:
  • android
  • ios