அரசியலில் எதிர்க்கட்சிகள் உண்டு, எதிரிக்கட்சிகள் என்பது கிடையாது! என்று பொதுவாக ஒரு டயலாக் உண்டு. ஆனால் இன்னைய தேதிக்கு தமிழகத்தில் தி.மு.க.வுக்கு ஒரு எதிரிக்கட்சி இருக்கிறது. அது அ.தி.மு.க.தானே! என்று நீங்கள் நினைத்தால், தவறு. பா.ம.க.தான் அந்த இடத்தில் இருக்கிறது. எடப்பாடி, பன்னீர்செல்வம் இருவரையும் விட ஸ்டாலினுக்கு எதிராக மிக மூர்க்கமாக கொடி பிடித்துக் கொண்டிருப்பது டாக்டர் ராமதாஸ்தான்.கடந்த சில வாரங்களாக ஸ்டாலினின் மனதை வெகுவாக நோகடிக்கும் விவகாரம் ‘முரசொல் அலுவலகம் அமைந்திருக்கும் நிலமானது, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலம்!’ என்று ராமதாஸ் கொளுத்திப்போட்ட பிரச்னைதான்.

வழக்கு, விசாரணை...என்று பெரியளவில் இது விஸ்வரூபமெடுத்திருக்கிறது.அதேவேளையில், ‘மிசா சட்டத்தில் தான் கைதானதாக ஸ்டாலின் கதைவிடுகிறார். அவர் அதில் சிறைபடவுமில்லை, சித்ரவதை அனுபவிக்கவுமில்லை’ என்று கிளம்பியிருக்கும் விவகாரமும் அவரை தூங்கவிடாமல் படுத்தும் அதே வேளையில், ராமதாஸோ தொட்டதுக்கும், துடைச்சதுக்கும் ஸ்டாலினை வறுத்தெடுத்து அறிக்கை விடுவது வழக்கமாகி இருக்கிறது. தி.மு.க.வின் மாஜி நிர்வாகியான மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் குறித்த புத்தக விஷயத்திலும் கூட ஸ்டாலினுக்கு எதிராக விமர்சனங்களை வைத்து, வெளுத்திருக்கிறார் ராமதாஸ். 


இப்படியாக அவர் முழுக்க முழுக்க ஸ்டாலினை நோகடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அன்புமணியோ ஸ்டாலின் ஸ்டைலை காப்பியடிப்பதாக ஒரு விமர்சனம் கிளம்பியுள்ளது.அதாவது சட்டசபையில் பா.ம.க.வின் எண்ணிக்கை பூஜ்யம்தான். மீண்டும் தங்கள் பிரதிநிதிகளை சட்டசபைக்குள் எப்படியாவது அனுப்பிட துடிக்கிறது அக்கட்சி. 2021 தேர்தலில்  பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் இருக்க வேண்டும் எனும் நோக்கில் தங்களின் வாக்கு வங்கி அதிகமிருக்கும் தமிழக வடமாவட்டங்களில் ‘நடை பயணம்’ செல்ல திட்டமிட்டுள்ளார் அன்புமணி.இதில் முதல்கட்டமாக பத்தாம் தேதியிலிருந்து கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபயணம் செய்து தன் கட்சி தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார். 

இதன் மூலம் பா.ம.க.வுக்கு மக்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கிட நினைத்திருக்கிறார். ஆனால் மழை காரணமாக அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது, மீண்டும் விரைவில் துவங்கும். இந்த சூழலில் அன்புமணியின் இந்த நடைபயண திட்டமானது, ‘ எங்கள் தளபதி ஸ்டாலினின் நமக்கு நாமே! நடைபயணத்தை காப்பியடித்து அன்புமணி  செய்யும் வேலை. கடந்த 2016-ல் நமக்கு நாமே நடந்ததன் மூலமாக தி.மு.க.வை எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்த்தினார் தளபதி. அவரைப் போலவே தானும் தன் கட்சிக்கு உயிர் கொடுக்க வேண்டும் எனும் ஆசையில் அன்புமணி ராமதாஸ் இப்படி திட்டமிட்டிருக்கிறார். என்னதான் சூட்டுக் கம்பியை எடுத்து தன் உடம்பில் வரி வரியாய் பூனை சூடு போட்டுக் கொண்டாலும், அது புலியாகிடுமா? தலைவர் ஸ்டாலினை அன்புமணியின் அப்பா ராமதாஸ் எதிர்த்து, கிண்டலடித்து அறிக்கைவிடவும், பேட்டி கொடுக்கவும் செய்றார். ஆனால் மகன் அன்புமணியோ அப்பட்டமாக ஸ்டாலினை காப்பியடிக்கிறார். இவ்வளவுதான் இவங்களோட கொள்கை வீறாப்பெல்லாம்.அரசியல் ஆதாயத்துக்காக எதையும் இறங்கி செய்யும் புத்தியுடைய பா.ம.க.வை மக்கள் மறந்து வெகு காலமாச்சு!” என்கிறார்கள்.