நெல்லையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  

நெல்லையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். விளையாட்டு பாட வேளையில் விளையாடுவதற்காக மைதானத்திற்கு வந்தபோது கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்து இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில், அடித்தளம் இல்லாமல் கட்டப்பட்டிருந்ததால் இடிந்து விழுந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். அதேசமயம் நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் அன்பழகன், விஸ்வ ரஞ்சன், சுதீஷ் ஆகியோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்த சஞ்சய், இசக்கி பிரகாஷ், ஷேக் அபுபக்கர், அப்துல்லா ஆகிய 4 மாணவர்களுக்கும் ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவியாக அளிக்கப்படும் என்றும் அத்துடன் இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனையுற்றதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நெல்லையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், நெல்லையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விளக்கமளிக்க பள்ளி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய கட்டடங்கள் உள்ள பள்ளிகளுக்கு அங்கு குழந்தைகளை அனுமதிக்காதீர்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படியே பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்தார். பள்ளி சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் விபத்து காரணமாக, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பரபரப்பும் அதிர்ச்சியும் சோகமும் தொற்றி கொண்டுள்ளது. சமீப காலமாக தொடர்ந்து பெய்து வந்த மழைக் காரணமாக சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் எனவும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.