கருணாநிதியிடம் இருந்து அன்பழகனை பிரிப்பதற்காக பலமுறை சூழ்ச்சிகள் நடந்த போதும் அதற்கு இடம் கொடுக்காமல் கருணாநிதியுடன் இணைந்து பயணித்தார் அன்பழகன். 

காட்டூர் கிராமம் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் கல்யாணசுந்தரம்- சொர்ணாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக 1922-ம் ஆண்டும் டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார். பெற்றோர் சூட்டிய ராமையா என்ற பெயருடன் பள்ளிக்கல்வியை நிறைவு செய்த இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் முடித்தார். 

பெரியாரிடம் இருந்து சுயமரியாதை கொள்கையை கற்று அதை பின்பற்றத் தொடங்கிய அன்பழகன் தனித்தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கல்லூரி பயின்ற காலத்தில் ராமையா என்ற பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார். பச்சையப்பன் இளங்கலை முடித்த கையோடு அந்தக்காலத்திலேயே தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். இதையடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியை தொடங்கிய அவர், அவ்வப்போது அண்ணாவை சந்தித்து விட்டு செல்வார். அவ்வாறு அன்பழகன் வரும்போதெல்லாம். ''அடடா வாப்பா பேராசிரியர் தம்பி'' என அண்ணா வாஞ்சையோடு அழைத்தது மட்டுமல்லாமல், தன்னை சுற்றி இருக்கும் நிர்வாகிகளிடமும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். 

அன்று அண்ணா சூட்டிய பேராசியர் பட்டம் பின்னாளில் அவருக்கு தனிப்பெரும் அடையாளமாக மாறி ''இனமான பேராசியர் அன்பழகன்'' என அழைக்கப்பட்டு வந்தார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் -மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கும் ஏறத்தாழ 75 ஆண்டுகால நட்பு இருந்தது. இத்தனை ஆண்டுகளில் அவர்கள் இருவருக்கும் இடையே எத்தனையோ முறை கருத்து வேறுபாடுகள், மன வருத்தங்கள் ஏற்பட்ட போதிலும் ஒருவரை ஒருவர் பொதுமேடைகளிலோ, நிர்வாகிகள் மத்தியிலோ, அல்லது குடும்பத்தினரிடமோ விட்டுக்கொடுத்ததில்லை.

 

அன்பழகனை தனது அண்ணனாகவே பாவித்து வந்தார் கருணாநிதி. அவரிடம் இருந்து அன்பழகனை பிரிப்பதற்காக பலமுறை சூழ்ச்சிகள் சூழந்த போதும் மனச்சிதைவின்றி கருணாநிதியுடன் இணைந்து பயணித்தார். சாந்த குணம் கட்சி மற்றும் ஆட்சி தொடர்புடைய விவகாரங்களில் பேராசிரியர் அன்பழகனை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை துணிச்சலாக வெளிப்படையாக எடுத்துக்கூறக் கூடியவர். அதே சமயம் யார் மனதும் புண் படாதவாறு, வார்த்தைகளில் கவனம் செலுத்துவதில் மிகுந்த கண்ணும் கருத்துமாக இருப்பார்.

 

பொதுவாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் போது யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டார் அன்பழகன். சாந்தமாகவும், முகமலர்ச்சியாகவும் பேசுவது அன்பழகனின் சிறப்பு இயல்புகளில் முக்கியமான ஒன்று. பொதுச்செயலாளர் கடந்த 1977-ம் ஆண்டு திமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற அவர், தனது வாழ்நாளின் இறுதி நொடி வரை 43 ஆண்டுகள் அந்தப் பதவியை அலங்கரித்துள்ளார். கட்சியின் மிக முக்கிய பொறுப்பான பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை மிக திறமையாக கையாண்டு, விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து கட்சித் தொண்டர்கள் அனைவருக்குமான ஆசானாக இருந்திருக்கிறார் அன்பழகன். இதனால் அவரது மறைவு என்பது திமுகவை பொறுத்தவரை ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகவே கருதப்படுகிறது.