Anandhi promoted As a Minister Of Rehapitation And Women Welfare In srilanka Goverment

ஈழத்தில் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் மிக மிக வலுவாக இருந்த கால கட்டம் அது. புலிகள் அமைப்பின் கிழக்குப் பகுதி அரசியல் ஒருங்கிணைப்பாளராக இருந்தார் சசிதரன் எனும் எழிலன். தீரமான களப்போராளி மட்டுமல்ல கொள்கை நுணுக்கமானவர்.

புலிகளுக்கு எதிராக ராணுவம் எடுக்கும் எந்த ஆயுதத்துக்கும் தங்களிடம் எதிராயுதம் உண்டு என்று புலிகள் இயக்கம் நடத்தும் பொது மேடைகளில் கர்ஜித்தவர். ஆனால் தங்களை அழிக்கும் நோக்கில் பொதுமக்களையும் சேர்த்து இம்சிக்கும் ‘கொத்துக் குண்டுகளை’ இலங்கை ராணுவம் பயன்படுத்துவதை கண்டிப்பாக கைவிட வேண்டும் என்று போராடியவர். கொத்துக்குண்டை பயன்படுத்துவது இலங்கை ராணுவத்தின் கோழைத்தனத்தை காட்டுகிறது என்பார் சசிதரன்.

அப்பேர்ப்பட்ட சசிதரன் 2009_ல் நடந்த இறுதிப்போரின் போது ராணுவ முற்றுகையின் கீழ் சரணடைந்தார். அவர் உட்பட சரணடைந்த புலிகள் பலரை கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ததாக இலங்கை ராணுவத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த சசிதரனின் மனைவிதான் ஆனந்தி. கணவர் போலவே அரசியல் சித்தாந்தவாதி. வடக்கு மாகாண பகுதியில் நிகழ்ந்த தேர்தலில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். இவர் தற்போது மறுவாழ்வு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி செய்வது தெரிந்த விஷயம். விக்னேஸ்வரன் அங்கே முதல்வராக இருக்கிறார். இவரது அமைச்சரவையிலிருந்த குருகலராஜா, ஐங்கரேஸ்வரன் ஆகியோர் மீது சமீபகாலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் வெடித்தன. இவர்களை பதவியிலிருந்து விலகிட சொல்லி முதல்வரான விக்னேஸ்வரன் உத்தரவிட்டார்.

இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் உள்மோதல் வெடித்தது. விக்னேஸ்வரனுக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் வடக்கு மாகாண மக்கள் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக இருந்ததன் விளைவாக அவரை முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கும் முடிவானது கைவிடப்பட்டது.

இந்நிலையில்தான் நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு பதிலாக புதியவர்கள் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில்தான் ஆனந்தியும் அமைச்சராகி இருக்கிறார். ஆனந்தி இயல்பிலேயே தீரமான கள செயல்பாட்டாளர், திடமான அரசியல் சிந்தனாவாதி. எந்த விவகாரம் தொட்டும் மிக ஆழமாகவும், ஆணித்தரமாகவும் அலசி வாதாடக் கூடியவர். தைரியமான பெண்ணும் கூட.

எனவே இந்த துறையில் ஆனந்தியின் செயல்பாடு சிறப்பென அமையுமென்றே ஈழம் குறித்தான அரசியல் பார்வையாளர்கள் நம்புகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, இரு அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் உதறியெறியப்பட்ட விவகாரம் சர்வதேச சமுதாயத்தில் இனம் புரியாத கவலையை உருவாக்கியிருக்கிறது.

ஜெனீவா, நார்வே உட்பட உலகின் பல நாடுகளை சேர்ந்த ஈழ சுதந்திர ஆர்வலர்கள் “வடக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளை தமிழர்கள் ஆளும் சுதந்திரம் கிடைக்கப்பெற்றது தேசிய தலைவர் உள்ளிட்டோரின் தியாகத்தால்தான். வயிற்றுக் கரு முதல் வயோதிகர் வரை உயிர் தந்து பெற்றமைந்த சுதந்திரம் இது. இதை கேவலம் ஊழலுக்கு காவு கொடுக்காதீர்கள்.” என்று தமிதேசிய கூட்டமைப்பை சேர்ந்த அரசியல்வாதிகளை நோக்கி கரம் கூப்பி கேட்கின்றனர்.

ஆம், ஊழல் வளர்க்க உயிர் தரவில்லையே புலிகள்!