வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் ரூ. 500 கணவனுக்கு தெரியாமல் மனைவி எடுத்துக் கொண்டதால் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாமல் விழுப்புரத்தில் சுயேச்சை வேட்பாளர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். 

மக்களனை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதான கட்சியினர் மட்டுமின்றி சுயேச்சையாக களமிறங்கவும் பலர் தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரும், அதிமுக கூட்டணி வேட்பாளராக பாமகவை சேர்ந்த வேட்பாளரும் களமிறங்க உள்ளனர். அங்கு சுயேச்சை வேட்பாளராக அரசன் என்பவர் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகையை செலுத்துவதற்காக ரூ. 12500 சேஎமித்து வீட்டில் வைத்திருந்தார். அந்தப்பணத்தையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் டெபாசிட் செய்ய கிளம்பினார். தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அவர்கள் கேட்ட சான்றிதழ்களை சமர்ப்பித்தார்.

அப்போது தன்னிடம் இருந்த 12500 பணத்தை டெபாசிட் செய்ய அரசன் கொடுத்துள்ளார். அதை எண்ணி பார்த்த அதிகாரி ரூ.500 குறைவாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் பதறிய அரசன் அந்த பணத்தை பெற்று மீண்டும் எண்ணிப் பார்த்தபோது 500 குறைவாக இருந்ததை தெரிந்து கொண்டார். இதனால் வேட்பு மனுவை தாக்கல் செய்யமுடியாமல் அவர் வீடு திரும்பினார். அப்போது நடந்த விஷயங்களை மனைவியிடம் கூற, அந்த பணத்தில் இருந்து 500 ரூபாயை தான் காய்கறி வாங்க எடுத்ததாக மனைவி கூறியுள்ளார். இதனையடுத்து அரசன் நாளை மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்