Amruta does not require a DNA test - TN Govt

அம்ருதா, ஜெயலலிதாவின் மகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காலமான முதலமைச்சர்
ஜெயலலிதாவின் மகள் தான் என்றும், அவரது உடலைத் தோண்டி எடுத்து தங்கள் முறைப்படி போலீஸ் பாதுகாப்புடன் இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் என்று
கூறியிருந்தார். மேலும் தனக்கும் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் அம்ருதா தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில், அம்ருதா, ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கான சட்டப்பூர்வமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் அவரது மனுவை விசாரணைக்கு ஏற்கக்
கூடாது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி கடந்த ஜனவரி மாதமே உத்தரவு பிறப்பித்தும், தமிழக அரசு தரப்பில் இதுவரை பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அரசு தலைமை வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு சென்றுள்ளதால், வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதி வைத்தியநாதன் ஒத்தி வைத்தார். குறிப்பிட்ட தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஆர்.கே.நகர் தேர்தலை மனதில் வைத்து, அரசிய்ல காரணங்களுக்காக அம்ருதா வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அம்ருதாவுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஆதலால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது.