அதிமுக – அமமுக கட்சிகள்  எதிரெதிராக இருந்தாலும் இரு கட்சியில் உள்ளவர்களும் என்றாவது ஒரு நாள் இரு கட்சிகளும் இணையும் என்று பெரும் நம்பிக்கையில் உள்ளனர். திமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்ட அதிமுக ஒரு நாளும் உடைந்துவிடக் கூடாது  என்பதில் அதிமுக தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். தற்போது அதிமுக-அமமுக பிரிந்திருந்தாலும் நிச்சயம் ஒன்று சேரும் என்று நினைக்கின்றனர்.

இந்நிலையில் டி.டி.வி.தினகரன் தற்போது அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்துள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அக்கட்சியில், அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில்  ஐக்கியமாக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அ.தி.மு.க.,வை கைப்பற்ற, சட்ட போராட்டம் தொடரும் என்றும், அதுவரை, அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்குவதாகவும், ஆதரவாளர்களிடம் தினகரன் தெரிவித்தார்.இதனால், சசிகலா குடும்பத்தினரால், அ.தி.மு.க.,வில், கட்சி மற்றும் ஆட்சி பதவிகளை பெற்றவர்கள், தினகரன் அணியில் இருந்தனர்.

விரைவில், அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைந்து விடும் என்ற, நம்பிக்கையில் இருந்தனர். கட்சி நிர்வாகிகளை, தொடர்ந்து செலவு செய்ய வலியுறுத்தியது, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி வந்தது உள்ளிட்ட காரணங்களால், அ.ம.மு.க.,வில் இருந்த பலரும், தினகரன் மேல் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து, உச்சகட்ட அதிருப்தியில் இருந்த, முக்கிய நிர்வாகிகளான, முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்பாலாஜி, கலைராஜன் ஆகியோர், தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த சூழலில், மக்களவைத் தேர்தல் முடிந்த உடனே, தினகரன், அ.ம.மு.க.,வின் பொதுச்செயலராக பொறுப்பேற்றார். 

மேலும், கட்சியை, தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார்.தேர்தல் பிரசாரத்தின் போது, பேனர், போஸ்டர்களில், சசிகலா, ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை விட, தனக்கு முக்கியத்துவம் அளிக்க, கட்சியினரை வற்புறுத்தினார்.இதனால், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பலரும், தினகரன் மீது, கடும் அதிருப்தியில் உள்ளனர்

மேலும் கட்சியைப் பதிவு செய்தது, சசிகலாவை ஒரேயடியாக ஓரங்கட்டும் செயல் என்றும் அமமுகவின் மூத்த நிர்வாகிகள் நினைக்கின்றனர். இதையடுத்து அமமுகவின் தென் மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான கர்நாடக மாநில பொறுப்பாளர் ஒருவரும் அவர்களுடன் சில முக்கிய நிர்வாகிகளும் விரைவிலேயே அதிரடி முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.